காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு ஊராட்சியில் ஒரே பகுதியில் 8க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்ததால்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் அங்கு ஆய்வு நடத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளன, அதில் 1,800 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அக்கிராமத்தில் ஒரே தெருவில் 8 பேருக்கு அடுத்தடுத்து சிறுநீரக கோளாறு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தலைமையில் 40 மருத்துவர்கள் உட்பட 62 பேர் கொண்ட குழு வீடு வீடாக சென்று அனைவருக்கும் உடல் எடை, உயர் இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை என ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், செங்காடு கிராமத்தில் நிலத்தடி நீரையும் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்காடு கிராமத்தில் உள்ள 350 குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இரத்த பரிசோதனை செய்து வருகின்றனர். சமீபத்தில், அக்கிராமத்தில் ரம்யா என்கிற 15 வயது மாணவி ஒருவர் திடீரென்று உடல் பருமன் அடைந்ததால் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் அம்மாணவிக்கு சிகிச்சை அளித்து பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு ஏற்கனவே இரண்டு கிட்னியும் செயல் இழந்துள்ளதாக தெரிவித்தனர். அதேபோல் அடுத்தடுத்து 10 பேருக்கு இப்பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சிறுநீரக பிரிவு தலைமை மருத்துவர் கோபாலகிருஷ்ணன், சமூக நல மருத்துவ தலைமை மருத்துவர் சோமசுந்தரம் உட்பட 40 மருத்துவர்கள் அம்மக்கள் அனைவரையும் பரிசோதனை செய்தனர். தன்னார்வலர்கள், லேப் டெக்னீஷியன் என 62 பேர் 5 குழுக்களாக பிரிந்து, செங்காடு கிராமத்தில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர். செங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் இரத்தம், சிறுநீர், உடல் எடை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை சேகரித்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், செங்காடு கிராமத்தில் 8 பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறுநீரக துறை வாயிலாக அறியப்பட்டது.
Must Read | செப். 29ஆம் தேதி நடக்கும் 100 கி.மீ. ‘நோ ஹாங்கிங் சேலஞ்ச்’! பின்னணி என்ன?
அப்பகுதி மக்கள் செங்காடு கிராமத்தை அடுத்து இயங்கி வரும் அலுமினியம் உருக்கும் ஆலையில் இரவு நேரத்தில் ஏற்படும் புகையால் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் மற்றும் அதன் துகள்கள் தண்ணீரில் கலப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையை கருத்தில் கொண்டு ஆய்வு நடத்தி அந்த தொழிற்சாலையை முற்றிலுமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் அனைவரும் தற்போது வேலை இழந்து வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையை அப்பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் இலவசமாக டயாலிசிஸ் செய்து தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.