Home /News /tamil-nadu /

கடனை செலுத்த தாமதப்படுத்தியதால் அவமானப்படுத்திய தனியார் நிதி நிறுவனம்: வேதனையில் தற்கொலை செய்த மாற்றுத்திறனாளி

கடனை செலுத்த தாமதப்படுத்தியதால் அவமானப்படுத்திய தனியார் நிதி நிறுவனம்: வேதனையில் தற்கொலை செய்த மாற்றுத்திறனாளி

Youtube Video

காஞ்சிபுரம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கோரி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி தந்ததால், நிறுவன வாசலிலேயே பூச்சி மருந்து குடித்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான மனோகரன். மாற்றுத்திறனாளியான இவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். இந்நிலையில் விவசாயம் செய்வதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் 2.11 லட்ச ரூபாய் கடன் பெற்றார்.

    மனோகரன், மாற்றுத் திறனாளி என்பதால் அவருடைய ஜாமினில் ராமகிருஷ்ணன் என்பவரது பெயரில் கடன் பெறப்பட்டது. கடன் தொகையில் 1.68 லட்ச ரூபாய் செலுத்திய நிலையில், 43,380 ரூபாய் மட்டுமே பாக்கி இருந்தது.

    பாக்கியை செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள், மனோகரன் வீட்டிற்கும், ராமகிருஷ்ணன் வீட்டிற்கும் சென்று மிரட்டி உள்ளனர். நிறுவனத்திற்கு மனோகரனே நேரில் சென்று அவகாசம் தர கெஞ்சியுள்ளார்.

    வீட்டில் உள்ளவர்களை நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் காவல்நிலையத்திற்கும் சென்று புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டும் விசாரணை நடக்கவில்லை. இதனால் மீண்டும் நிறுவனத்திற்குச் சென்றுஅவகாசம் தரக் கோரியுள்ளார் மனோகரன்.

    இந்த நிலையில் அவர் மனைவிக்கும் அவரது ஒரு வயது குழந்தைக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கடந்த 3 மாதங்களாக தவணை செலுத்த முடியவில்லை.

    இதையடுத்து பாக்கியை செலுத்தும்படி தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் நேரிலும், தொலைபேசியிலும் அடிக்கடி நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். கடந்த 22ம் தேதி, மனோகரன் வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் பாக்கியை செலுத்தாவிட்டால் கோர்ட், கேஸ் என அலைய நேரிடும் எனவும் அவமானப்படுத்தியதாகத் தெரிகிறது.  மனளைச்சலுக்கு ஆளான மனோகரன், அன்று மாலையே, நிதி நிறுவன வாசலில் வைத்து பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதையடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் உயிரிழந்தார்.

    மனோகரன் உயிரிழப்பு தொடர்பாக, வாலாஜாபாத் காவல்நிலையத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் மீது உறவினர்கள் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் ஊழியர்கள் அமர்நாத், கிருஷ்ணா, சரத்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனோகரனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, காஞ்சிபுரம் விவசாயம் சங்கம், விவசாய சங்க கூட்டமைப்பு மற்றும் பாமக ஆகியோர் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அதில், விவசாயி மனோகரன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Karthick S
    First published:

    Tags: Kanchipuram, Suicide

    அடுத்த செய்தி