வீடுகளின் சுவற்றில் கோடிக்கணக்கில் கொசுக்கள் மொய்த்து கொண்டிருக்கின்றன . குடியிருப்பு பகுதியில், கொசுக்கள் உருவாகும் வகையில் மாநகராட்சி குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 25வது வார்டு கிருஷ்ணசாமி தெருவில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு அருகே மாநகராட்சியின் குப்பை கிடங்கு பல ஆண்டு காலமாக உள்ளது. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை இங்கு கொட்டி வருகிறார்கள். இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி வருகிறது. இது தவிர, கொசு புழு வளருவதற்கு ஏதுவாக இருப்பதால், அப்பகுதி மக்கள், 'டெங்கு' காய்ச்சல் வருமோ என, பீதியில் உள்ளனர்.
சுகாதார சீர்கேடு குறித்து கிருஷ்ணசாமி தெரு மக்கள் கூறியதாவது மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், கோரிக்கை மனுவாகவும் கொடுத்து உள்ளோம். துாய்மை அவசியம், ஆனால் இதுவரை, மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. எனவே, இனியாவது மாசுபடுத்தும் இடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, துாய்மைப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Also read: நேட்டோ, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்: ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கான தொடக்கம் என்ன?
மேலும் தெருக்களில் உள்ள குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் சுவர்களில் கோடிக்கணக்கில் கொசுக்கள் மொய்த்து கொண்டிருக்கின்றன. இரவு நேரங்களில் பெரும்பாலான மக்கள் தூக்கத்தை தொலைத்து இருக்கிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இரவு நேரத்தில் வீடுகளில் அமர்ந்து நிம்மதியாக சாப்பிட கூட முடியவில்லை என வேதனையோடு அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
கொசுக்கள் உற்பத்தியாகும் இடத்தை கண்டறிந்து அவற்றை முற்றிலும் அழித்து அப்பகுதி மக்கள் நிம்மதியுடன் உறங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் மாநகராட்சி நிர்வாகம் விரைவில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
செய்தியாளர்: சந்திரசேகர் (காஞ்சிபுரம்) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.