காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெய்பீம் பட பாணியில் பொய்யான திருட்டு வழக்குகள் போட்டு பழங்குடியின மக்களை போலீசார் துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், புலிவாந்தல் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர் ராஜாக்கிளி. இவரது உறவினர் கார்த்திக். இவர்கள் சவுரி முடி, பாசி மணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்தும், மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உத்திரமேரூரில் நிகழ்ந்த நகைத் திருட்டு சம்பவம் ஒன்றில் ராஜாக்கிளி மற்றும் கார்த்திக்கிற்கு தொடர்பு இருப்பதாகக் கூறி இருவரையும் காஞ்சிபுரம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்பது தெரியாமல் ராஜாக்கிளியின் மனைவி சங்கீதா மற்றும் உறவினர்கள் உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு சென்று கேட்டுள்ளனர்.
அப்போது தாங்கள் யாரையும் அழைத்து வரவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வழக்கறிஞர் பிரபா உதவியுடன் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரித்த போது உண்மை தெரியவந்தது.
இதையும் படிங்க: பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
அதன்படி, உத்தரமேரூரில் சாலவாக்கம் பகுதியில் 15 நாட்களுக்கு முன்னதாக ஒரு வீட்டிலிருந்து 18 பவுன் நகை திருடப்பட்டது. திருட்டு குறித்து போலீசார் விசாரித்த போது, திருடப்பட்ட நகைகள் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள ஒரு அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்டது தெரியவந்தது.
அந்த நகைகளை மீட்ட போது கைது செய்யப்பட்ட ராஜாக்கிளி, கார்த்திக் பெயர்களில் நகை அடகு வைக்கப்பட்டிருந்ததால் இருவரையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் தங்கள் மீது அடிக்கடி பொய்ப் புகார் புதிவு செய்து, தங்கள் பகுதியில் உள்ள ஆண்களை நள்ளிரவு நேரத்தில் அழைத்துச் செல்வதாக பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
குறிப்பாக ஜெய்பீம் பட பாணியில் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளை முடிக்க தங்கள் மீது பொய்யான வழக்குகளை போடுவதாகவும் புகார் தெரிவித்தனர். திருட்டு நகைகளுக்கு ஈடாக தாங்கள் உழைத்து சேர்த்து வைத்திருக்கும் அரை சவரன், ஒரு சவரன் நகைகளை அடாவடியாக பறிமுதல் செய்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்
மேலும் படிக்க: பப்ஜி மதன் மனைவியின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க மறுத்த நீதிமன்றம்
போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கையால் தினக்கூலிகளான தங்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், பெண்களும்,குழந்தைகளும் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். போலீசாரின் நடவடிக்கையை தடுக்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jai Bhim, Police fir