கொரோனா அச்சம் காரணமாக பணிபுரிய மறுப்பு தெரிவித்து காஞ்சிபுரம் அருகேயுள்ள ஹுண்டாய் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஹுண்டாய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதன் எதிரொலியாக இன்று முதல் தளர்வு இல்லா
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நிறுவனங்களே தங்களது ஊழியர்களின் பயணத்திற்காக நான்குசக்கர வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக அரசின் அனுமதியுடன் பெரும்பாலான தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில்,
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலை மூன்று ஷிப்ட் களும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல்ஷிப்டுக்கு பணிக்கு வந்த பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தொழிற்சாலை இயங்கி வருவதால் பெரும்பாலான நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் பத்து நபர்கள் இதுவரை வைரஸ் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள ஊழியர்கள், இந்த அசாதாரண சூழலில் மீண்டும் தொழிற்சாலைகள் செயல்பட்டால் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் , எனவே விடுமுறை அளிக்க வேண்டும் என கூறி இன்று காலை முதல் தொழிற்சாலைக்குள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடையே நிர்வாகம் சார்பில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.