மெளனத்தில் உறைந்த மெரினா..!

மெரினா கடற்கரை

மக்கள் கூட்டமில்லாமல், மணற்பரப்புகள் காய்ந்து கிடக்கின்றன; நனைத்து விளையாட கால்கள் இல்லாததால் அலைகள் அமைதியாய்  தூங்குகின்றன.

  • Share this:
வரலாற்றின் பக்கங்களில் முதன்முறையாக காணும் பொங்கலன்று பொதுமக்கள் மெரினாவை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாலைத் தொடங்கி, நள்ளிரவு நேரம் வரையிலும் எப்போதுமே பரந்து விரிந்த மெரினா மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். அதுவும் காணும் பொங்கல் தினத்தன்று சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் பொழுதுபோக்கு இடமாக இருப்பது மெரினா கடற்கரை தான்.

உணவு சமைத்து எடுத்து வந்து; கடற்கரையில் அமர்ந்து, பகிர்ந்துண்டு, அலைகளோடு விளையாடி, பொழுதைக் கழிப்பது இந்த மாவட்ட மக்களின் வாடிக்கையான ஒன்று. ஏழை,பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் கட்டணமின்றி வரவேற்குமிடம் மெரினா. ஆனால் அனைவருக்கும் நினைவு தெரிந்த வரையில், இந்த முறை காணும் பொங்கலன்று மெரினாவை கண்டுகளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் கொரோனா நோய் பரவல் ஏற்படுமென மெரினாவுக்கு பொதுமக்கள் வருவதற்கு தமிழக அரசு மூன்று நாள் தடை விதித்துள்ளது. இதனால் மெரினாவை நம்பி குடும்பத்துடன் வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சிகளை பார்க்க முடிகிறது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை செல்லும் அனைத்து வழிகளும் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமில்லாமல், மணற்பரப்புகள் காய்ந்து கிடக்கின்றன; நனைத்து விளையாட கால்கள் இல்லாததால் அலைகள் அமைதியாய்  தூங்குகின்றன. கடைவிரித்தவர்கள் மெரினாவை விட்டு நடையைக் கட்டினர்; மொத்தத்தில் சென்னை மெரினா நிசப்தத்தில் மௌனத்தில் உறைந்து கிடக்கிறது.
Published by:Vijay R
First published: