துப்பாக்கியுடன் வனப்பகுதியில் மறைந்த கொள்ளையர்களை பிடிக்க நூற்றுக்கணக்காண போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் என்கவுன்டர் அரங்கேற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் துப்பாக்கிமுனையில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வனப்பகுதியில் பதுங்கிய வடமாநில கொள்ளையர் இருவரில் ஒருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அடுத்த பென்னளூர் கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான இந்திராணி. அதேபகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல் பணிக்கு வந்த இந்திராணியை வழிமறித்த இருவர் துப்பாக்கி முனையில் அவர் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இந்திராணியின் கூச்சல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்டவர்களை துரத்தி பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் வழிப்பறிக்கொள்ளையர்கள் தூப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிவிட்டு அருகில் இருக்கும் ஏரியை ஓட்டியுள்ள வனப்பகுதியில் பதுங்கிக்கொண்டனர்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பதுங்கியிருக்கும் கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் கொள்ளையர்கள் கையில் துப்பாக்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொள்ளையர்கள் தப்பித்து விடாமல் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.
இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக இருநூறுக்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி கொள்ளையர்களை தேடிவந்தனர். வனப்பகுதி என்பதால் 5 ட்ரோன்கள் உதவி மூலம், கொள்ளையர்கள் பதுங்கியுள்ள இடத்தை தேடியுள்ளனர் .அப்போது ஏரியில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு ஒருவர் நகர்ந்ததைப் பார்த்த போலீசார் அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரது பெயர் நைம் அக்தர் என்பதும் அவருடன் வந்த முர்கஷா, மேவலுார் குப்பம் கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து மேவலுார் குப்பத்தில் சம்பந்தப்பட்ட வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர் குற்றவாளியை பிடிக்க முயன்ற பொழுது, அவர் கத்தியால் தாக்கியதில் இரண்டு காவலர்களுக்கு பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. போலீசாரிடம் இருந்து முர்கஷா தப்பியோடிய போது, தற்காப்புக்காக போலீசார் அவரைச் சுட்டதில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார்
இதையடுத்து பிடிபட்ட கொள்ளையனைப் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். என்கவுன்டரில் பலியான கொள்ளையன் முர்கஷா, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. முர்கஷாவால் தாக்கப்பட்டு காயமடைந்த காவலர்கள் இருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த இரண்டு கொள்ளையர்களுடனும் வந்த 3வது கொள்ளையன் முத்தர்ஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் டாஸ்மாக்கில் பணியாற்றி வந்த துளசிதாஸ் மற்றும் ராம் ஆகிய இருவரும் கடந்த 4ம் தேதி மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்கத்திக் குத்தில் துளசிதாஸ் உயிரிழந்தார். மருத்துவமனையில் ராம் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடலில் இருந்து துப்பாக்கி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கி குண்டும், என்கவுன்டரில் சிக்கிய வடமாநிலக் கொள்ளையர்களின் துப்பாக்கிக் குண்டும் ஒன்றுதானா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.