போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 2 பேர் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து வகையான மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று போதைக்காக தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவசங்கரன், சுரேஷ், கிருஷ்ணன் ஆகிய நபர்களுடன் இணைந்து கூட்டாக எலுமிச்சை சாறு பிழிந்து தின்னர் என்னும் ரசாயனத்தை குடித்து உள்ளனர்.
இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிவசங்கர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.
இவர்களுடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்ன ஆனார் என்பது கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை வயக்காட்டில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே சுரேசை காவல்துறையினர் தற்போது தேடி வருகிறார்கள். இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் - சந்திரேசேகர் ராமசந்திரன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.