தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம். பஸ் பயணங்களில் நின்றுகொண்டு செல்ல அனுமதி இல்லை. மத வழிபாட்டு தலங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். திரையரங்குகள், ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கொரோனா பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றச் செய்வது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நோய்த்தொற்று ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டது. கடந்த 30 நாட்களாக படிப்படியாக நோய்த்தொற்றின் அளவு உயர்ந்து தற்போது 4.8 சதவிகிதமாக உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தொற்று கூடுதலாக உள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மார்ச் முதல் வாரத்தில் 4000 க்கும் குறைவாக இருந்தது. இப்போது 41,900 -ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து நாளொன்றுக்கு சராசரியாக 10-க்கு மேல் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இந்நோய் தொற்று காரணமாக நிலவும் சூழலை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலர் தலைமையில் குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதாரம், காவல், வருவாய், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும்
அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்.கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். திரையரங்குகள், காய்கனி சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு அறிவிக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இத்தகைய இடங்களில் பணிபுரிபவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.