ஓசியில் சாம்பார் கேட்டு கொடுக்காத ஹோட்டலுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளர்...

Youtube Video

காஞ்சிபுரத்தில், ஓசியில் சாம்பார் கேட்டு கொடுக்காத ஹோட்டலுக்கு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

 • Share this:
  கோவையில், ஹோட்டல் ஒன்றில் இரவில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களை காவல் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் லத்தியால் தாக்கினார். அதேபோல், கோவை குனியமுத்துாரில், பேக்கரி கடை ஒன்றின் காசாளரை காவல் உதவி ஆய்வாளர் கணேஷ் தாக்கினார். இந்த சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கொரோனாவின் பெயரால் போலீசார் அத்துமீறுவதாக வியாபாரிகள் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், காவலர்களின் அடுத்தடுத்த அட்டகாசங்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன.

  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. தாலுகா காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் தன்ராஜ், கடந்த 9ம் தேதி இந்த ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கியுள்ளார். அதற்கு அவர்கள் சாம்பார் பொட்டலம் கொடுத்துள்ளனர்.

  கூடுதலாக ஒரு சாம்பார் பொட்டலம் கேட்டுள்ளார் தன்ராஜ். ஆனால் 10 ரூபாய் தந்தால் கூடுதல் பொட்டலம் தருவதாக ஹோட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். கோபமடைந்த தன்ராஜ் திரும்பிச் சென்று விட்டார்.

  இதையடுத்து மறுநாள் 10ம் தேதி அதே ஹோட்டலுக்கு சென்ற தாலுகா காவல் உதவி ஆய்வாளர் ராஜமணிக்கம், ஓட்டல் ஊழியர்கள் முககவசம் அணியவில்லை, சமூக இடைவெளி சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

  அப்போது அங்கு வந்த வாகன ஓட்டுநர் தன்ராஜ், நான் 10 ரூபாய்க்கு சாம்பார் கேட்டபோது இவங்க தரலை. இவங்களுக்கு 500 அபராதம் காணாது 5000 ரூபாய் அபராதம் போடுங்க சார் என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கமும், உடனடியாக 10ம் தேதியிட்டு 5000 ரூபாய் அபராதம் விதித்து ரசீது வழங்கியுள்ளார்.

  இதே போல் ஹோட்டலின் எதிரே உள்ள டீக் கடையில் கூட்டம் இல்லாதபோது வந்த உதவி ஆய்வாளர் சமுக இடைவெளி இல்லாமல் இருந்ததாக ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த காஞ்சிபுரம் வியாபாரிகள் சங்கத்தினர் திங்கட்கிழமை அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர். மேலும், கொரோனாவைக் காரணம் காட்டி காஞ்சிபுரம் நகரில் போலீசார் கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும் தங்கள் புகாரில் குற்றம்சாட்டியுள்ளனர்.

  மேலும் படிக்க... மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

  2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட தொழில்களில் உணவகம் நடத்தும் தொழிலும் ஒன்று. இந்த நிலையில், காவலர்கள் கொரோனா விதிமுறைகளை அமல்படுத்துகிறோம் என்ற போர்வையில் கட்டாய வசூல், தாக்குதல் என தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் துறை உயரதிகாரிகள் இதில் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் அதிருப்தியில் இருந்து தப்பிக்க முடியும்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: