உங்கள் தொகுதி: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

காஞ்சிபுரம்

பேரறிஞர் அண்ணா பிறந்த ஊர்.... அத்தி வரதர் எழுந்தருளிய ஊர்.. என்ற சிறப்புக்கெல்லாம் சொந்தமான காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பற்றித்தான் உங்கள் தொகுதி.. அறிந்ததும்... அறியாததும் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்...

 • Share this:
  ஆயிரம் கோயில்களின் நகரம் காஞ்சிபரம்... முப்பெரும் சக்தி வடிவங்களில் மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி வரிசையில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைக் கொண்ட நகரம் இது... சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற மிகவும் தொன்மையான ஊர்... குளத்தில் சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு 48 நாட்கள் அருள் பாலிக்கும் சிறப்பு வாய்ந்த ஊர்... 2019ம் ஆண்டில் தரிசனம் தந்த அத்திவரதரை ஒரு கோடியே ஏழாயிரம் பேர் தரிசித்தனர். பாலாறு பாயும் இந்த தொகுதியில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கும் நிலையில் நெல்லே அதிகமாக பயிரிடப்படுகிறது. நெல்லுக்கு அடுத்தபடியாக பட்டுச் சேலை உற்பத்தியில் ஈடுபடுவோர் அதிகமாக இருக்கின்றனர்.

  உலகப்புகழ் பெற்ற காஞ்சிப்பட்டினை நெய்யும் நெசவாளர்கள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து 15,000மாகியுள்ளது வருத்தத்திற்குரிய உண்மை. 22 அரசு கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூலம் பட்டுச்சேலைகள் விற்பனை தினமும் கோடிக்கணக்ககான ரூபாய்க்கு நடைபெறுகிறது.

  1957 சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றியபோது பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் வென்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். 1962ம் ஆண்டு தேர்தலில் அண்ணா இதே தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

  அதிமுக தொடங்கப்பட்டதில் இருந்து காஞ்சிபுரம் அந்த கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. அதிமுக இதுவரை 7 முறை காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியுள்ளது. திமுக 6 முறையும், பாமக, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

  2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட எழிலரசன் அதிமுகவின் மைதிலியை தோற்கடித்தார். எழிலரசன் 90,533 வாக்குகளும் மைதிலி 82,985 வாக்குகளும் பெற்றனர்.

  கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப்பூங்கா அமையும் என தமிழக அரசு அறிவித்து 8 ஆண்டுகள் ஆனபோதும் இதுவரை அமையாததை வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார்கள் வாக்காளர்கள். 2018இல் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 38 கோடி ரூபாய் மதிப்பில் கீழ்கதிர்பூரில் புதிய பேருந்து நிலையம் அமையும் என்ற முதல்வர் அறிவிப்பும் இதுவரை நிறைவேறவில்லை. நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் தேவை, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை பட்டியலோடு காத்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.

  மேலும் படிக்க....உங்கள் தொகுதி: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

  இரு முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற தொகுதியை கடந்த முறை இழந்த அதிமுக இந்த முறை மீண்டும் கைப்பற்றுமா... பொறுத்திருந்து பார்க்கலாம்....

  வீடியோ

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: