உங்கள் தொகுதி: ஆரணி சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

Youtube Video

அரிசிக்கும்... பட்டிற்கும் புகழ் பெற்ற ஊர் இது... இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் தொகுதி இது... ஆம்... ஆரணி

 • Share this:
  திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆரணி. 1989இல் வடஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை, வேலூர் என இரண்டாக பிரிந்தபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம்பிடித்தது இந்த நகரம். பல்லவர் ஆட்சிக் காலத்தில் வணிகத்தில் சிறந்த விளங்கிய இந்த ஊர் இன்றும் அந்த பெயரை காப்பாற்றி வருகிறது. ஜவ்வாது மலையில் உருவாகி நகரத்தை ஒட்டி ஓடும் கமண்டல நதியால் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது இந்த தொகுதி... அதில் 500 ஏக்கரில் நெல் விளைகிறது. அரிசி உற்பத்திக்கு பெயர் பெற்ற இந்த ஊரில் 200க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நெல் அரவை மூலம் கிடைக்கும் பொன்னி, சோனா, ஆர்.என்.ஆர். உள்ளிட்ட அரிசி வகைகள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவுக்கும் அனுப்பப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் டன் அளவுக்கு அரவை மூலம் அரிசி கிடைக்கிறது.

  காஞ்சிபுரம் போல பட்டு உலகில் ஆரணிக்கும் செல்வாக்கு உண்டு. இந்த தொகுதியில் உள்ள சேவூர், ஒண்ணுபுரம், எஸ்.வி.நகரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெசவாளர்கள் நெய்யும் கைத்தறி பட்டு சேலைக்கு புவிசார் குறியீடு இருக்கிறது. சென்னை, பெங்களூரு, கோவையின் மிகப்பெரிய ஜவுளிக்கடைகளை இங்கு நெய்யப்படும் பட்டுகள் அலங்கரிக்கின்றன. ஆரணியை ஆட்சி செய்த நிர்வாகிகள் ஜாகிர்தார் என அழைக்கப்பட்டனர். சுதந்திர இந்தியாவில் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் வந்தபோது ஜாகீர்தார் முறைக்கு முடிவு கட்டப்பட்டது. ஜாகிர்தார் குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாச ராவ், காதலித்து மணம் முடித்த ஜெர்மனிய பெண்ணுக்காக பூசிமலைக் குப்பத்தில் கட்டிய கண்ணாடி காதல் மாளிகை பொழிவிழுந்து வரலாற்றின் எச்சமாய் நின்று கொண்டிருக்கிறது.

  ஆரணி தொகுதியில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று வந்திருக்கின்றன. அதிமுக 6 முறையும் திமுக 5 முறையும் வாகை சூடியுள்ளன. காங்கிரஸ் மற்றும் தேதிமுக தலா ஒரு முறை வெற்றியை பதிவு செய்துள்ளன.

  2016ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சேவூர் ராமச்சந்திரன் 7,327 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு 94,074 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் பாபுவுக்கு 86,747 வாக்குகளும் கிடைத்தன.

  ஆரணி தொகுதியில்மொத்தமுள்ள 2,75,063 வாக்காளர்களில் அதிகபட்சமாக 1,41,788 பேர் பெண்கள். 1,33,253 பேர் ஆண்கள். 22 பேர் திருநங்கைகள்.

  திருவண்ணாமலையை இரண்டாக பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு வயது 10 ஆகிறது. நெல் ஆராய்ச்சி மையம், வெளிநாட்டு ஏற்றுமதிக்கான தனி அலுவலகம், ரேஷன் அரிசிக்கான கொள்முதல், அரிசி பூங்கா என அரிசி ஆலை உரிமையாளர்களின் கோரிக்கை பட்டியல் நீளமாக இருக்கிறது.

  இரு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் குறையாத நிலையில் ஒருங்கிணைந்த பெரிய பேருந்து நிலையம் ஒன்று அவசியத் தேவை என்கிறார்கள் வாக்காளர்கள். கிடப்பில் போடப்பட்ட திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டத்தின் பக்கம் ஆள்பவர்களின் கடைக்கண் பார்வை விழாதா என்ற ஏக்கமும் இத்தொகுதி மக்களுக்கு இருக்கிறது. அமைச்சரின் தொகுதியை அதிமுக இந்த முறை தக்க வைக்குமா.... திமுக மீண்டும் கைப்பற்றுமா... பொறுத்திருந்து பார்ப்போம்...

  மேலும் படிக்க... உங்கள் தொகுதி : தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய தொகுதி கவுண்டம்பாளையம்..

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: