கொரோனா ஊரடங்கு, பாதிப்பு - தமிழகத்தின் கள நிலவரம் என்ன?

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உட்பட 11 பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
    தமிழகம் முழுவதும் மதிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில், சேலத்தில் விதிகளை மீறி திறந்திருந்த நகைக் கடைக்கு, மாநகராட்சி அதிகாரிகள் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

    நீலகிரியின் கால சூழலை கருதி 2 மணி நேரம் கூடுதலாக கடைகள் திறக்க அனுமதிக்க வியாபாரிகள் கோரியுள்ளனர். குளிர் பிரதேசமான உதகையில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மட்டுமே வணிகம் நடப்பதால் இழப்பு ஏற்படுவதாக வணிகர்கள் வேதனை தெரிவித்தனர்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆட்டுச்சந்தையில், ஏராளமானோர் கூடுவதால், கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தை பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பதால், சந்தையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகளால், மதுரை பொன்மேனி பைபாஸ் சாலையில் நடைபெறும் மாலை நேர வாரச்சந்தையானது, காலை நேரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தவித முன் அறிவிப்புமின்றி பகலிலேயே வாரச்சந்தை செயல்பட துவங்கியதால், வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    கடலூர் அருகே கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததாகக் கருதிய கிராம மக்கள், அச்சமடைந்து ஊரை விட்டே வெளியேறியுள்ளனர். திட்டக்குடி அருகேயுள்ள கனகம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். அவரது சடலத்தைக் கூட பார்க்க வராத ஊர் மக்கள் கொரோனா தொற்று அச்சத்தால் ஊரை விட்டே வெளியேறியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தும் யாரும் இந்தக் கிராமத்தைப் பார்வையிட வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உட்பட 11 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 35 கொரோனா நோயாளிகள் இங்கு உயிரிழந்துள்ளனர்.

    மேலும் படிக்க... கொரோனாவால் உயிரிழப்பு நடந்த வீட்டில் கொள்ளையடித்த கொடியவர்கள்... கோவையில் நடந்த கொடூரம்...

    இந்தநிலையில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர்களது மகனும், நடிகருமான சாந்தனு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாக்யராஜ், பூர்ணிமா மற்றும் வீட்டில் பணியாற்றுபவர்கள் என அனைவரும் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: