தான் படிக்காவிட்டாலும், தமிழகத்தில் சுமார் 23 ஆயிரம் பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 119ஆவது பிறந்த தினம் இன்று.
1903ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த காமராஜர், ஆறாம் வகுப்பிற்கு பிறகு பள்ளிப்படிப்பை தொடரவில்லை. அதனால் தான் முதலமைச்சராக பதவியேற்ற உடன் தமிழகம் முழுவதும் பள்ளிக் கூடங்களை திறந்தார் காமராஜர். எந்த சொத்தும் இல்லாத ஏழை மக்களுக்கு கல்வி என்ற அழியாத சொத்தை இலவசமாக வழங்கியவர். இதனால் 1957 ஆம் ஆண்டு 15, 800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 29ஆயிரமாக உயர்ந்தது.
கல்வி பயில்வதற்கு வறுமை ஒரு காரணமாக இருக்க கூடாது என்பதற்காக கல்வியை இலவசமாக வழங்கியதோடு, இன்று வரை உலகம் வியந்து போற்றும் திட்டமான மதிய உணவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இதனால் தான் பதவியேற்ற முதல் ஐந்தாண்டுகளிலேயே 7 விழுக்காடாக இருந்த தமிழகத்தின் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 40 விழுக்காடாக உயர்ந்தது.
மேலும், நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், கல்பாக்கம் அணு மின்நிலையம், ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலி பிரிண்டர் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்கு ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில் திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார்.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் தான் இன்றளவும் தமிழக விவசாயத்தின் உயிர்நாடியாக உள்ளது என்றால் மிகையில்லை. மேட்டூர் கால்வாய்த்திட்டம், பவானி திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களையும் கொண்டுவந்தவர் காமராஜர்.
கட்சிப்பணிகளில், இளையவர்களுக்கு வழிவிடும் கே- பிளானை நடைமுறைப்படுத்தி இளையோர்களை அரசியலுக்குள் அழைத்து வந்தவர் இவர். நேருவின் மறைவிற்கு பிறகு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியோரை பிரமதமராக அடையாளம் காட்டியதால் கிங் மேக்கர் ஆனார்.
மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தபோதும், இறுதிவரை வாடகை வீட்டிலேயே வசித்தவர். 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் காமராஜர் இறந்த போது, சில கதர் வேட்டி சட்டைகள், 150 ரூபாய் பணம் இவையே காமராஜரின் சொத்தாக இருந்தன. பொது வாழ்வின் புதிய மைல்கல்லாக திகழ்ந்த காமராஜரின் பிறந்தநாள் இன்று.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress leader, Kamaraj