ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திரும்பி பார்ப்போமா வாருங்கள்.. யார் இந்த காமராஜர்..! தலைமுறையை மாற்ற அவர் விதைத்த 5 விதைகள்..!

திரும்பி பார்ப்போமா வாருங்கள்.. யார் இந்த காமராஜர்..! தலைமுறையை மாற்ற அவர் விதைத்த 5 விதைகள்..!

காமராஜர்

காமராஜர்

தமிழகத்தைப் பின்பற்றித்தான் பல மாநிலங்கள் மதிய உணவுத் திட்டத்தில் இறங்கின. இந்த திட்டத்தின் தொடர்ச்சி தான் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்ம வீரர் காமராஜரின் 47வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1903, ஜூலை 15 -ல் பிறந்த இவர் அக்டோபர் 02, 1975 -ல் இயற்கை எய்தினார்.

கல்வி கண் திறந்த காமராஜர்

1957-1962 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 13,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்து வைத்தார். இதன் மூலம் மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சம் ஆக உயர்ந்தது. பதினோராம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி என்பதையும் உறுதி செய்தார். பொருளாதார ஏற்றத்தாழ்வு உடைகளில் தெரியக்கூடாது என்பதற்காக சீருடைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்தார்.

சாப்பாடு தருகிறேன் படிக்க வா..!

1925-ல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக சிங்காரவேலர் இருந்தபோது, மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்க வைத்தார். அந்த மதிய உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் காமராஜர் அறிமுகப்படுத்தினார். இது உலக அளவில் இன்னமும் பேசப்படுகிற புதிய முயற்சி. இதன்மூலம் பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதும், இடையிலேயே நின்றுபோகாமல் தொடர்ந்து வருவதும் அதிகரித்தது. லட்சக்கணக்கான குடும்பங்களில் கல்வி முதன்முறையாக நுழைந்தது. தமிழகத்தைப் பின்பற்றித்தான் பல மாநிலங்கள் மதிய உணவுத் திட்டத்தில் இறங்கின. இந்த திட்டத்தின் தொடர்ச்சி தான் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டம்.

Also read | காந்திய மண்ணில் வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வறண்ட காடை வளம் ஆக்கியவர்!

சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் எந்த வளர்ச்சியையும் காணாத கிராமங்களில் முதன்முறையாகச் சாலைகளும், மின் இணைப்புகளும், கல்விக்கூடங்களும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறையும் வந்தது என்றால், அதற்கு காமராஜரின் ஆட்சிதான் காரணம். அந்த அளவுக்கு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்திய முதலமைச்சராக இருந்தார். மேலும் பவானி அணை, வைகை அணை, பாபநாசம், சோலையாறு எனப் பல அணைகளைக் கட்டி, விவசாயப் புரட்சிகளுக்கு வழி அமைத்துத் தந்தார் காமராஜர்.

கிங் மேக்கர் காமராஜர்!

கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கள் பதவிகளை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப் பணியாற்ற வர வேண்டும் என காமராஜர் வலியுறுத்தியதை நேரு ஏற்றுக்கொண்டார். அக் 02, 1963 -ல் இதே நாளில், தமது ராஜினாமாவை அறிவித்து, ஒன்பது ஆண்டுகளாக வகித்துவந்த முதலமைச்சர் பதவியை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார். பிரதமர் பதவி வாசல்வரை வந்து வரவேற்றபோது அதைப் புறக்கணித்துவிட்டு, களப்பணியாற்றியவர் காமராஜர். எந்த இடத்திலும் பதவிக்காகக் கொள்கையை விட்டுக்கொடுக்காத போராளியாகவே மிளிர்ந்தார் காமராஜர். இப்படிப்பட்ட நுட்பமான நகர்வுகளால் `கிங்மேக்கர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

எளிமையின் மறு உருவம்!

அவர் மறைந்த பிறகு அவர் பெட்டியில் சில வேட்டி, சட்டைகள் மட்டுமே இருந்தன. காமராஜர் பெயரில் எந்த சொத்தும் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே அவரின் உண்மையான சொத்து. அவர்களுக்காக உழைக்க அவரின் கட்சியே தளம். முதலமைச்சராக வாழ்ந்தும் தனக்கென்றும், தனது குடும்பத்திற்கென்றும் எதுவும் வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த உன்னதர் அவர்.

இப்படி எண்ணற்ற நன்மைகளை நம்மிடையே விதைத்து விண்ணுலகம் சென்றவர் காமராஜர். இவரை பற்றி பேச இந்த ஒரு நாள் போதாது தான்.. வாழ்நாள் முழுவதும் நினைவலைகளாக இன்றும் நம்முடனே வாழ்ந்து வருகிறார்.

First published:

Tags: Kamaraj