தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதனால், சென்னையின் பல்வேறு பகுதிகள் மழை நீரில் மூழ்கின. குறிப்பாக, தியாகராய நகர், கே.கே.நகர், திருவல்லிக்கேணி வடசென்னைப் பகுதிகளில் வியாசர்பாடி, திருவொற்றியூர், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. அதனால், பொதுமக்கள் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதித்தது.
பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மழை பாதித்த இடங்களில் அமைச்சர்களுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காத வண்ணம் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை அமைப்புகள் மூலம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நவம்பர் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கமல்ஹாசன் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘வானிலை குறித்து வரும் செய்திகள் அடுத்த சில நாட்களுக்கு நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியதை உணர்த்துகிறது. கவனமாக இருப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.