நேர்மையாளனை தமிழக அரசு சிதைக்கப் பார்க்கிறது: அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு

நேர்மையாளனை தமிழக அரசு சிதைக்கப் பார்க்கிறது: அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு

கமல்ஹாசன்

நேர்மையான அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சி செய்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

 • Share this:
  அண்ணாப் பல்கலைக்கழக சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், ‘அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது, தமிழகத்தில் இதற்கு தகுதியான நபர் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம். அந்த கேள்வி இன்னமும் தொக்கி நிற்கிறது. அந்த நிலைபாட்டில் இப்போதும் மாற்றமில்லை. ஆனால், வந்தவரோ, வளைந்து கொடுக்காதவர். அதிகாரத்தின்முன் நெழிந்து குழையாதவர். அண்ணாப் பல்கலைக்கழகத்தை உலகத் தரத்துக்கு மாற்ற வேண்டும் என்று முனைந்தவர். பொறுப்பார்களாக நம் ஊழல் திலகங்கள். வளைந்து கொடுக்கவில்லையென்றால் உடைப்பதுதானே இவர்களது வழக்கம்.

  எவனோ ஒருவர் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒரு பேடி எழுதிய மொட்டைக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை குழு அமைத்துள்ளனர். மொட்டையில் முடி வராததால், மக்கள் வரிப் பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என்று கடைபோட்டு காத்திருக்கின்றனர். முறைகேடாக அண்ணாப் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும், அண்ணாப் பல்கலைக்கழக வாகனங்களையும் பயன்படுத்தியவர்களையும் விசாரித்துவிட்டீர்களா? உயர் கல்வித்துறை அமைச்சர் 60 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பணி நியமனம் செய்கிறார் என்று ஜூனியர் விகடனில் செய்தி வந்ததே விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, என அத்தனை துறைகளும் ஊழலில் திளைக்கிறார்கள் என்று ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சிகளும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே விசாரித்துவிட்டீர்களா? தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்கள் கடமை.

  கறைவேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்? இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், தற்போது மதிப்பெண் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சி செய்கிறீர்களா? சூரப்பாவின் கொள்கைச் சார்புகள், அரசியல் நிலைப்பாடுகள் மீது நமக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், ஒருவன் தன்னுடைய நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் கமல்ஹாசன் நான் சும்மா இருக்க மாட்டேன். நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மய்யமும் சும்மா இருக்காது. இதுஒரு கல்வியாளர்க்கும் அரசியல்வாதிக்குமான பிரச்னை அல்ல.



  நேர்மையாளனுக்கும், ஊழல்வாதிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் உன் வாழ்வை அழிப்போம். அவதூறு பரப்பி உன் அடையாளத்தை சிதைப்போம் என்பதை சூரப்பாவுக்கும் அவரைப் போல நிமிர்வுடன் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை. சகாயம் தொடங்கி சந்தோஷ் பாபுவரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் நீளம். பேரதிகாரிகளே இவர்களுடன் போராடி களைத்து விருப்ப ஓய்வு பெறுகிறார்கள் என்றால் சாமானியர்களின் நிலை என்ன? இன்னொரு நம்பி நாராயணன் உருவாகிவிடக் கூடாது.

  நேர்மைக்கும், ஊழலுக்குமான மோதலில் அறத்தின் பக்கம் நிற்க விரும்புபவர்கள் தங்கள் மௌனம் கலைத்து பேசியாகவேண்டும். குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாறவேண்டும். நேர்மைதான் நம்முடைய ஒரே சொத்து. அதையும் விற்று வாயில் போட்டுவிடத் துடிக்கும் ஊழல் திலகங்களை ஓட ஓட விரட்ட வேண்டும். நேர்மையை வெல்லும்’ என்று தெரிவித்துள்ளார்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Karthick S
  First published: