ஊரடங்கில் குழந்தைத் திருமணம் அதிகரிப்பு: உடனே தடுத்து நிறுத்தவேண்டும் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்

கமல்ஹாசன்

கொரோனா ஊரடங்கின் காரணமாக குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளது. அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்தவொரு பேரிடரின்போதும் அதற்குப் பின்னரும் பெரும் தாக்கங்களை எதிர்கொள்பவர்க்கள் இளம் சிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள். மிக எளிதில் கல்வி இடைநிற்றல், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணங்கள் போன்ற சுரண்டல்களுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

    கடந்த ஆண்டு ஊரடங்கு தொடங்கியபோதே, கொரோனா பெருந்தொற்றால் அடுத்த பத்தாண்டுகளில் 1.30 கோடி குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் என யுனிசெஃப் எச்சரித்தது. கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாக CRY தன்னார்வல அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சேலம், தருமபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. மிக ரகசியமாக நிகழ்வதால் இந்தக் கசப்பான உண்மை வெளியுலகிற்குத் தெரியாமலே போய்விடுகிறது.

    புள்ளி விவரங்களின்படி கடந்த 2020 மே மாதத்தில் மட்டும் சலத்தில் 98, தர்மபுரியில் 192 என தமிழகத்தில் சுமார் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகம். அறியாமை, மூட நம்பிக்கை, சாதிப் பற்று, வறுமை, ஊரடங்கு காலத்தில் திருமணச் செலவுகள் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உறுதியான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் இந்த ஆண்டும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்தவேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான சமூக நலத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். தமிழ் நிலத்தில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதிசெய்வோம் என்று வலியுறுத்தியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: