கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அதனையடுத்து, கோவை மாவட்டத்தில் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கும், வானதிஸ்ரீனிவாசனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இருவரும் ஒருவொருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இந்தநிலையில், கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘வரலாறு என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. முன்பாகவே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். இப்போது வந்ததற்காக மகிழ்கிறேன். மறுபடியும் சினிமாவிற்கு நடிக்க சென்றுவிடுவார் என்றார்கள்.
நான் சம்பாதித்த பணத்தை தான் தேர்தலில் செலவு செய்துள்ளேன். நேர்மையாக கணக்கு காட்டியுள்ளேன். சில மிரட்டல்கள் வந்தன. எல்லாவற்றிக்கும் தயாராக தான் வந்துள்ளேன். எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக தான் என முடிவு எடுத்துள்ளேன். அரசியலுக்கு இடைஞ்சல் எற்பட்டால் சினிமாவில் நடிப்பது நிறுத்தப்படும்.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின்னர், புதிய படங்களிலும் நடிப்பேன். கூடுதலாக சம்பளம் வாங்கி மீண்டும் மக்களுக்கு செலவு செய்வேன். எனது அரசியல் பயணம் தொடரும். எனது முகவரி விரைவில் கோவைக்கு மாறும். பா.ஜ.க வேட்பாளர் சொல்வது போல, தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுவேன் என்பது நிஜமல்ல’ என்று தெரிவித்தார்.