கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பை அளிக்க முடியாத துறையாக சினிமா துறை இருப்பது அவமானகரமான ஒன்று என்று நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
நேற்று படப்பிடிப்பு தளத்தில் பிரமாண்ட கிரேன் திடீரென விழுந்தது. இதனால், ப்ரொடக்ஷனில் பணியாற்றிய இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் சண்டை கலைஞர் ஒருவர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ’லைகா நிறுவனத்தில் விபத்து நடைபெற்றதற்காக, ஒரு ராஜ்கமல் நிறுவனம் சார்பாகவோ பாதிக்கப்பட்டர்களைப் பார்க்க வரவில்லை. இது என் குடும்பத்தில் நடைபெற்ற விபத்து. இந்தத் தொழிலில் இருக்க வேண்டிய பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் விபத்து நடந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் சினிமா துறை எடுக்க வேண்டிய விஷயம். 100, 200 கோடி ரூபாய் வசூல் என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பை அளிக்க முடியாத துறையாக சினிமா துறை இருப்பது அவமானகரமான ஒன்று.
இந்தச் சம்பவம் தனிப்பட்ட முறையில் எனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. என்னால் இயன்றது, காயமுற்றவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாயை அறிவிக்கிறேன். இது முதலுதவிதான் பரிகாரம் இல்லை. எதைக் கொண்டு உயிரிழப்பை ஈடுகட்ட முடியாது.
இனிநடக்கப்போகும் படப்பிடிப்புகளில் கடைநிலை ஊழியனுக்குக் கூட பாதுகாப்பு இருக்க வேண்டும். காப்பீடு இருக்க வேண்டும். அதற்கு முழுதுறை பங்கேற்க வேண்டும். இதனை வேண்டுகோளாக வைக்கவில்லை. இது நம்முடைய கடமை. அதனை நான் நினைவு கூர்கிறேன். விபத்துக்கு ஏழை பணக்காரன் என்று தெரியாது. அது சுனாமி போன்றது. மயிரிழையில்தான் நானும் இயக்குநரும் உயிர் தப்பியுள்ளேன். எனக்கு பக்கத்தில்தான் விபத்து நடந்தது’ என்று தெரிவித்தார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.