Home /News /tamil-nadu /

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் யாரைக் காக்க ரூ.1,000 கோடியில் நாடாளுமன்றம்? - கமல்ஹாசன் காட்டம்

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் யாரைக் காக்க ரூ.1,000 கோடியில் நாடாளுமன்றம்? - கமல்ஹாசன் காட்டம்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் யாரைக் காக்க 1,000 கோடி ரூபாயில் நாடாளுமன்றம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    93 ஆண்டுகள் பழமையான தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாற்றாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. கடந்த 1921 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஆறு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து 1927 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. அப்போதைய கவர்னர் ஜெனரல் இர்வின் பிரபு நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டடம் பயன்பாட்டுக்கு வந்து 93 ஆண்டுகளான நிலையில் நவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது.

    64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது அமைகிறது. முக்கோண வடிவில் கட்டப்படும் இந்த கட்டடம், தற்போதைய இரு அவைகளை காட்டிலும் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமர முடியும். தற்போது மக்களவையில் 543ம், மாநிலங்களவையில் 245 இடங்களும் உள்ள போதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இடவசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடைபெறும் போது இருக்கைகளின் எண்ணிக்கையை 1,224 ஆக அதிகரிக்க முடியும். நவீன தொலைத்தொடர்பு வசதிகள், நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான பாதுகாப்பு அம்சங்களோடு இந்த கட்டடம் உருவாக்கப்படுகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டும் மக்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், பெரும் பொருட் செலவில் நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படுவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

    நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. நாடாளுமன்றக் கட்டிடம் கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவில், நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகளைத் தொடரக் கூடாது. ஆனால், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Kamal hassan, Parliament

    அடுத்த செய்தி