குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எள்அளவும் பயன்தராத புதிய கல்வித் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் காலங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது
. இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘தும்பியின் வாலில் பாறைக்கல்லைக் கட்டி பறக்கவிடுவது எவ்வளவு கொடுமையோ அதைவிட கொடுமையானது, பத்து வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையை கட்டிவைப்பது. இந்த கல்வித் திட்டம் எதைச் சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தைச் சொல்லிக்கொடுக்கும். இந்தத் திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது. குழந்தைகளுக்கும், பெற்றோர்களும் தேர்வு பயம்தான் அதிகமாகும்.
சாதிகளாலும், மதங்களாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட, மதிப்பெண்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்பொழுது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது. இந்தப் பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும்போது, ஒரு குழந்தை இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கிப் போகும். நான், எட்டாவதோடு படிப்பை நிறுத்தியதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால், இனி எந்த ஒரு குழந்தைப் படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் அமல்படுத்தியிருக்கும் பொதுத்தேர்வு முறைதான் காரணமாக இருக்கும்.
குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எள்அளவும் பயன்தராத புதிய கல்வித் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. அந்தத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதற்கு பதிலாக, பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் கவனத்தைச் செலுத்தினால், மாற்றம் இனிதாகும், நாளை நமதாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.