தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தத்திற்கு வாக்கு கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மேலகல்கண்டார் கோட்டை திரு.வி.க திடலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதையடுத்து திருவெறும்பூர் கடைவீதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ‘மக்களை ஏமாற்றுபவர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது. அவர்களை விரட்டியடிப்போம். தமிழகம் 4 வயது குழந்தையாக கையில் எடுத்தது. 66 வயதாகி விட்டது. இன்னனும் அப்படியே வைத்திருக்கிறார்கள். என்னை வாழ வைத்தவர்களை, இரண்டு கழகங்களும் மாறி மாறி ஆண்டு, அவர்களின் 7 சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து விட்டார்கள். நல்ல தலைவர்கள் ஆண்ட போது, நல்லது சில நடந்துள்ளது.
தனியாக நிற்பது மட்டும் நேர்மையல்ல. பல பேர் நேர்மையாக இருந்தால்தான். நாடு செழிக்கும். கமிசனைப் பிரித்துக் கொள்வது தலைமை அல்ல. தப்பு செய்தால் நீக்க வேண்டும். அது தான் தலைமை. ஊழலுக்கு மாற்று மற்றொரு ஊழலில்லை. எம்.ஜி.ஆரைப் பற்றி பேசக் கூடாது. அவர் எங்கள் சொத்து என்கிறார்கள். அவர் அனைவரின் சொத்து’ என்று தெரிவித்தார்.