சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம் - கோவையில் ஆட்டோவில் பயணித்து மக்களைக் கவரும் கமல்ஹாசன், வானதிஸ்ரீனிவாசன்

சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம் - கோவையில் ஆட்டோவில் பயணித்து மக்களைக் கவரும் கமல்ஹாசன், வானதிஸ்ரீனிவாசன்

கமல்ஹாசன், வானதி ஸ்ரீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வானதி சீனிவாசனும், கமல்ஹாசனும் ஆட்டோவில் பயணித்தும், பொதுமக்களையும் கட்சி நிர்வாகிளையும் நேரில் சந்தித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

  • Share this:
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மகளிர் அணி துணைத் தலைவர் வானதி சீனிவாசன் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான கமலஹாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான அப்துல் வகாப் போட்டியிடுகிறார். முக்கிய அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதன் காரணமாக கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. நேற்று வானதி சீனிவாசன்,  கமல்ஹாசன், அப்துல் வகாப் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் பணியிலும், பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியிலும் அரசியல்  கட்சியினர் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை கோவை மேற்கு தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட கமல் அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடினார். பின் புலியகுளம் பகுதியில் ஆவின் பாலகம் அருகே பொது மக்களை சந்தித்து பேசிய கமல், ராமநாதபுரம் பகுதியில் உள்ள தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரின் வீர மாருதி தேகப்பயிற்சி சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின் அங்கு சிலம்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறுவர்களிடம்  கலந்துரையாடி கமல், அங்கிருந்த புகைபடங்களை பார்த்து ரசித்தார்.

பின்னர் உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று மீன் மார்க்கெட்டில் உள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடிய கமல், உக்கடம்  ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் கலந்துரையாடினார்.  பின்னர் அங்கிருந்த ஆட்டோவில் பயணித்து தங்கியிருந்த  நட்சத்திர ஓட்டலுக்கு கமல் சென்றார்.

இதேபோன்று பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான வானதி சீனிவாசன் தேர்தல் அலுவலகமான 100 அடி வீதியிலிருந்து கூட்டணி கட்சியினர் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் ஆட்டோவிலேயே பயணித்து ஆதரவை திரட்டினார். பிரச்சாரம் துவங்கும் முன்பு செய்ய வேண்டிய வேலைகளையும் ஆட்டோவிலேயே சென்று செய்து வருகின்றனர். இரு வேட்பாளர்களிடம் சொகுசு கார்கள் இருந்தாலும் அதை தவிர்த்து எளிய முறையில் ஆட்டோவில் பயணித்து மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகின்றனர்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்  முக்கிய அரசியல்  பிரபலங்கள் காரில் பயணிப்பதைத் தவிர்த்து ஆட்டோவில்  பயணித்து மக்களை சந்திக்க துவங்கி இருப்பதால் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இதே வேளையில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான மயூரா ஜெயக்குமார் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன்பின்னர் அவரும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க இருக்கின்றார்.


உடனடி செய்தி இணைந்திருங்கள்...
Published by:Karthick S
First published: