மக்கள் நீதி மையத்தின் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சதீஷ் மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்ராஜ் ஆகியோரைஆதரித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பேசினார். அப்போது அவர், ‘பொள்ளாச்சி எனக்கு புதிய ஊரல்ல. இது நான் நடமாடிய இடம் எனக்கு பல வெற்றிகளை தந்த ஊர். இந்த ஊரின் பிரச்சனைகளை அறிந்தவர் நம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சதீஷ் குமார் மற்றும் வால்பாறை சட்டமன்றத் தொகுதி செந்தில்ராஜ். என்னுடைய வேட்பாளர்கள் அசட்டு தைரியத்தில் வந்தவர்கள் அல்ல.
இந்த சாக்கடையை இல்லாமல் செய்துவிட்டு தான் மக்கள் முகத்தில் முழிப்பார்கள் அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் தான் எங்கள் வேட்பாளர்கள். எங்கள் மீது களங்கங்களை எப்படியாவது கற்பிகவேண்டும் எனும் முயற்சி நடந்துகொண்டே தான் இருக்கும். நாங்கள் நேர்மையாக இருந்தால் எங்கள் மீது களங்கங்கள் படியாது. எனக்கு சாதி, மதம் கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட தலைமை உங்களுக்கு அவசியம். நான் என்னை தலைவனாக பார்க்கவில்லை. மக்களின் தொண்டனாக பார்க்கிறேன். நாம் கண்ட கனவுகள் எதுவும் பலிக்கவில்லை. 50 வருடங்கள் நம்பி மோசம் போனது தான் உண்மை.
பொள்ளாச்சி சந்தை காலம் காலமாக பேசக்கூடிய சந்தை. ஆனால் நான் பார்த்தபோது குக்கிராமமாக இருந்தது. ஆனால் தற்போது இருக்கும் வளர்ச்சி போதாது என்பது தான் எங்களுடைய கூற்று. 234 தொகுதியும் என் தொகுதி தான் என்று நம்புகிறேன். எத்தனை தொகுதிக்கு சென்றாலும் திறந்தவெளி சாக்கடை, ஆரோக்கியமான சாலை குடிக்க தண்ணி இல்லை. இது எல்லாம் எல்லா இடத்திலையும் அப்படி தான் இருக்கு. அதற்கு மாற்று அரசியல் வேண்டும். எங்கள் அஸ்திவாரம் நேர்மை தான். எங்கள் கட்சியில் உள்ளவர்கள் நேர்மையானவர்கள் என்பதை நான் கவனித்து வருகிறேன்.
இங்கு வந்தவர்கள் குவாட்டர் பாட்டிலுக்கும் பிரியானிக்காகவும் கூடியவர்கள் அல்ல. உங்கள் வாக்குறுதிகளை இவர்கள் நிறைவேற்றுவார்கள். அதற்கு நான் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து இட தயாராக இருக்கிறேன். 5,000 வாங்கிக்கொண்டு நாம் வாக்களித்தால் நாம் ஐந்து வருடம் வாழ்க்கையை குத்தகைக்கு எடுத்து கொள்வார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில வீடியோக்களை நான் பார்த்தேன். முதல்வரே சில்லறை காசுகளை கையில் வைத்து அமுத்துகிறார். அந்த அரசியலை மாற்ற வேண்டும் என்பதிர்க்காக தான் நாங்கள் வந்துள்ளோம். நீங்களும் முன்வரவேண்டும். நீங்கள் நேர்மையை ஆதரித்தால் நாங்கள் வெல்வதற்கு ஏதுவாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.