மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் முதல்முறையாக களம் காண்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தன்னுடன் போட்டியிடும் சக வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் கடிதம் எழ்தியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, “கோவை தெற்குத் தொகுதியின் சக வேட்பாளர்களே... மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கமல்ஹாசனின் அன்பு வணக்கம்.
தேர்தல் என்பது போர்க்களம் அல்ல. அது இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக்கொள்ள கூடாது என நான் என் சகாக்களிடம் அடிக்கடி குறிப்பிடுவேன்.
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழவேண்டுமென விரும்புகிறேன். யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும். நம்மில் யார் வென்றாலும், கோவை தெற்குத் தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள்.
எல்லோரும் மக்கள் பணி செய்யவே வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயகப் பண்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ்ந்தேற நாம் அனைவருமே ஒத்துழைக்கவேண்டும்.
கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் என் சக வேட்பாளர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல். pic.twitter.com/L62BKqPHpv
ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய முன்னகர்வில் கோவை தெற்கு இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டுமென விரும்புகிறேன். உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். ” இவ்வாறு கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.