காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணிகளை தொடங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதுவரையில் இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மநீம சார்பில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். 5 பாகங்களாக 5 ஆயிரம் கி.மீ பயணித்து தமிழ் மக்களை சந்தித்துள்ளேன். மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியை கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன்.
அது போலவே, கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய ‘பிக் பாஸ் சீசன்-4’ தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். இதுவும் மக்களுடைய பயணம்தான். நான்கரை கோடி தமிழர்களுடன் உரையாடியதும், உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில், எனது காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதுவரை ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அதை மீறியே சினிமா பணிகளையும், அரசியல் பணிகளையும் மேற்கொண்டேன்.
மேலும் படிக்க... ரஜினி மன்றத்தின் 3 மாவட்ட செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
பிரசாரம் தொடங்கும்போதே எனது காலில் அதிக வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்துள்ளது. எனவே, காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் என் பணிகளை புதிய விசையுடன் தொடர்வேன்.
மக்களை நேரில் சந்திக்க இயலாது என்னும் மனக்குறையை தொழில் நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக் கொள்ளலாம். இந்த ‘மருத்துவ விடுப்பில்’ உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்திற்கான நம் உரையாடல் இடையூறின்றி செயல்படும். என் மண்ணுக்கும், மொழிக்கும், மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் அது தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 4, Kamal Haasan, TN Assembly Election 2021