• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கல்யாணராமன் கைது... பாஜக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது - திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

கல்யாணராமன் கைது... பாஜக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது - திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

கல்யாணராமன் கைதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற நடவடிக்கையை பாஜக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கோவை மேட்டுப்பாளையத்தில் ஜனவரி மாதம் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகியான கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறான வகையில் பேசியதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, கல்யாணராமனை போலீசார் கைதுசெய்தனர்.

    தமிழகம் முழுவதும் அவர் மீது புகார்கள் குவிந்ததால் அவர் மீது குண்டர் சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட எஸ்.பியின் பரிந்துரையின் பேரில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு குறித்த விசாரணையில் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரை சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், கல்யாணராமன் கைதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற நடவடிக்கையை பாஜக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் அண்ணாமலை, கல்யாணராமனை ஜாமினில் எடுப்பதற்காக வழக்கறிஞர்கள் சென்றபோது, 2018ல் போடப்பட்ட எப்ஐஆர் (490), 2019ல் போடப்பட்ட எப்ஐஆர் (336), 2020ல் போடப்பட்ட எப்ஐஆர் (60), (98), (152) என இன்று புதிதாக 5 எப்ஐஆர்-ஐ கொண்டுவந்து மாஜிஸ்திரேட்டிடம் காவல்துறையினர் கொடுத்துள்ளனர். இதன் கீழாகவும் கல்யாணராமனை இன்னும் கைது செய்யாமல் உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

    கல்யாணராமன் குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு இப்போது தான் வெளியில் வந்திருக்கிறார். இந்த வழக்குகள் எல்லாம் குண்டாஸ் போடுவதற்கு முன்பாக உள்ள வழக்குகள். மாஜிஸ்திரேட் ஜாமின் கொடுக்க முன்வரும்போது, புதிதாக 5 எப்ஐஆர்-ஐ காட்டுகின்றனர். இதுபோன்ற செயலை பாஜக பார்த்துக்கொண்டு இருக்கும் என திமுக ஆட்சியாளர்கள் நினைத்தால் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும்.

    கல்யாணராமனை கைது செய்திருப்பதை எந்த விதத்திலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது. ஆளும் கட்சியின் ஏவல் துறையாக
    காவல்துறை இருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: