கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற பெண் தனது கணவருடன் உலகியநல்லூரிலுள்ள தனது சகோதரன் சிவாவின் வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கிருந்து தனது கணவர் மற்றும் அண்ணன் சிவாவின் குடும்பத்தினருடன் கல்வராயன் மலை தொடர்ச்சியில் உள்ள
ஆத்தூர் முட்டல் அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில் அருவியில் தெளிந்த நீராக சிறிதளவு நீர் கொட்டியதால் அனைவரும் குளித்து மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் சிவரஞ்சனி தனது சகோதரன் சிவாவின் எட்டு மாத கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கரையின் எதிர்ப்புறத்தில் மீன்களை காட்டியவாறு குழந்தையுடன் விளையாடி உள்ளார். சிவரஞ்சனி சென்ற பத்து வினாடியில் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் உருவாகி அருவியல் கொட்டியுள்ளது.
எதிர்பாராத இந்த வெள்ளப்பெருக்கால் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அருவியின் இக்கரைக்கு வேகமாக ஓடி வந்துள்ளனர்
. இந்நிலையில் நீர்மட்டம் உயர உயர சிவரஞ்சனியும் அவர் தன் சகோதரனின் கைக்குழந்தை சுஜியை தூக்கி வைத்தவாறு அலறி உள்ளார். இதனைக் கண்ட சிவரஞ்சனியின் சகோதரன் சிவாவும் அங்கே குளித்துக்கொண்டிருந்த அப்துல்ரகுமான் லட்சுமணன் ஆகிய மூவரும் தண்ணீரில் குதித்து சென்று அங்குள்ளவர்களின் வேட்டி மற்றும் பெண்கள் அணிந்திருந்த துப்பட்டா உள்ளிட்டவற்றை கயிறு போல் கட்டி பெரும் விபத்தில் சிக்கி இருந்த சிவரஞ்சனியும் எட்டு மாத கைக்குழந்தை சுஜனாவையும் காப்பாற்றினர்.
இந்த மீட்புப் பணியின் போது அப்துல் ரகுமானும் லட்சுமணன் ஆகிய இருவரும் இந்த தற்காலிக துணி முடிச்சு கயிறு அறுந்து கீழே விழுந்ததில் 100 மீட்டருக்கு அப்பால் அடித்து செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கரையின் ஓரம் எதிர்நீச்சல் போட்டு மரக்கிளைகளை பற்றி இருவரும் மீண்டும் வந்துள்ளனர்.
இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவத்தை நியூஸ்18-க்கு சிவரஞ்சனி விவரமாக தெரிவித்தார்.
தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதநேயத்துடன் இளம் பெண்ணையும் எட்டு மாத கைக்குழந்தையும் மீட்ட அனைவரையும் பொதுமக்களும் வனத்துறையினரும் காவல்துறையினரும் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டி வருவதோடு இவர்களின் வீரமும் மனிதநேயமிக்க இந்த செயலை பாராட்டி தமிழக முதல்வரும் டுவிட் செய்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.