Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கை யாரும் தனியாக புலன் விசாரணை நடத்தாதீங்க.. நடவடிக்கை பாயும்... அரசு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கை யாரும் தனியாக புலன் விசாரணை நடத்தாதீங்க.. நடவடிக்கை பாயும்... அரசு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்

Kallakurichi Incident : கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்புடைய வழக்கில் தன்னிச்சையாக புலன் விசாரணை நடத்தி குற்றப்புலனாய்வுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது நடவடிக்கை பாயும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக வீடியோ, பதிவுகள் வெளியிட வேண்டாம் எனவும் மீறி வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையில் முடிந்தது.

    கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா என 5 பேர் கடந்த 17ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..

    இதனிடையே, மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    மாணவியில் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்த நிலையில், பள்ளி வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாணவியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை கூட்டியுள்ளது.

    இந்த நிலையில் மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு விசாரணையில் உள்ள நிலையில் புலன்விசாரணையை பாதிக்கும் வகையில் தன்னிச்சையாக புலன் விசாரணை நடத்தி குற்றப்புலனாய்வுக்கு இடையூறாக செயல்படும் தனி நபரோ, ஊடகமோ செயல்படவேண்டாம் எனவும் மீறி செயல்பட்டு வீடியோக்கள் வெளியிட்டால் யூடியூப் சேனல்கள், சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

    மேலும், புலன்விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரியின் அலைப்பேசி எண்.9003848126 க்கு நேரடியாக பகிரும்படி வேண்டிக்கொள்ளப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Kallakurichi

    அடுத்த செய்தி