Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த இருவர் கைது!

கள்ளக்குறிச்சி கலவரம்: வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த இருவர் கைது!

கள்ளக்குறிச்சி பள்ளி

கள்ளக்குறிச்சி பள்ளி

தமிழகத்தையே உலுக்கிய கலவரத்தை தூண்டியதாக அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கள்ளக்குறிச்சி கலவரத்தில் வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

    மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் செய்தவர்கள் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு கூறியிருந்தார்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரத்தில் வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த தீபக், சூர்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தமிழகத்தையே உலுக்கிய கலவரத்தை தூண்டியதாக அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ADMK, Kallakurichi

    அடுத்த செய்தி