Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்!

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

    மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே, வன்முறை நடந்த இடத்தை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி, கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து சரியான முடிவுக்கு வரவேண்டியுள்ளது. பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், ஒரு தனிப்பட்ட பள்ளியில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை தனிப்பட்ட பார்வையில் பார்க்க வேண்டும். எல்லா தனியார் பள்ளிகளிலும் இதுபோன்ற சூழல் இருக்கும் என்று கூறமுடியாது; அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, காவல்துறையைச் சேர்ந்த டிஐஜி, எஸ்.பி. மற்றும் 52 காவலர்களுக்கு வன்முறை சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கு மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் செய்தவர்கள் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Kallakurichi, Sylendra Babu

    அடுத்த செய்தி