சுடுகாட்டில் மர்மநபர்கள் தோண்டிய குழியில் காயங்களுடன் பெண் சடலம் - கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
சுடுகாட்டில் மர்மநபர்கள் தோண்டிய குழியில் காயங்களுடன் பெண் சடலம் - கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் அருகே ஊர் சுடுகாட்டில் மர்மநபர்கள் தோண்டி மூடிய குழியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்துள்ள புதூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மர்ம நபர்களால் புதிய குழி தோண்டி மூடப்பட்ட சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இதுகுறித்து வடபொன்பரப்பி காவல் நிலையம் மற்றும் வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று குழியைத் தோண்டி பார்த்தனர். அப்போது சாக்குமூட்டையில் முகத்தில் பலத்த காயங்களுடன் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கட்டப்பட்டு மூட்டையைச் சுற்றிலும் உரம் மற்றும் யூரியா கொண்டு பூசப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவ குழுவினர் மற்றும் தடயவியல் துறையினர் ஆகியோரை வரவழைத்து அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் குழிதோண்டி மீண்டும் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. மேலும் பெண்ணின் அடையாளம் காணவும் வழக்கு குறித்து துப்பறியவும் இறந்த பெண்ணின் உடைகள் தலைமுடி உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் சேகரித்து சென்றுள்ளனர். இந்தப் பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர் எங்கு கொலை செய்யப்பட்டார்ம், கொலையாளிகள் அதே ஊரை சேர்ந்தவர்களா? வெளியூரைச் சேர்ந்த நபர்களா எனவும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: செந்தில்குமார் ( கள்ளக்குறிச்சி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.