Home /News /tamil-nadu /

கூவாகம் திருவிழா : தாலி கட்டிக்கொண்டு கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்த திருநங்கைகள்

கூவாகம் திருவிழா : தாலி கட்டிக்கொண்டு கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்த திருநங்கைகள்

தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், வழக்கத்தைவிட குறைந்த எண்ணிக்கையில் திருநங்கைகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தை நினைவுறுத்தும் வகையில் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த 5ம் தேதி சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் கோவில் பூசாரி கைகளால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளைச் சேர்ந்த திருநங்கைகள் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் வழக்கமாக கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் தங்கி கூத்தாண்டவர் தேர் நடைபெறும் முதல் நாளன்று மாலையில் மணப்பெண் அலங்காரத்தோடு வந்து கோவில் பூசாரி கைகளால் கூத்தாண்டவர் கடவுளை நினைத்து தாலி கட்டிக்கொள்வர்.

    பின்னர், இரவு முழுவதும் ஆடிப் பாடுவர். அடுத்த நாள் அதிகாலை தங்களின் தாலியை திறந்துகொண்டு திருநங்கைகள் கோவில் உள்ள பகுதியை விட்டு வெளியேறுவதும் வழக்கம். இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகள் மற்றும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் உள்ளூர் குழந்தைகள் முதல் ஆண்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் கலந்துகொண்டு தாலி அணிந்து கொள்வர்.

    உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்காக விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் வருகை குறைவானதால் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

    ஆயினும், தமிழகம், கேரளா, ஒரிசா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கோவிலுக்கு வந்து தங்களின் இஷ்ட தெய்வமான அரவான் என்றழைக்கப்படும்  கூத்தாண்டவரை வணங்கி பூசாரிகளின் தாலி கட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியும் கும்மியடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை கூத்தாண்டவர் தேர் பவனி நடைபெறும் பொழுது பொழுது தங்கள் தாலியை துறந்து வெள்ளை புடவை அணிந்து தங்கள் கைகளில் அணிந்திருந்த வளையல்களை பூசாரிகள் கையால் உடைத்தவாறும் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர் - எஸ் .செந்தில்குமார், கள்ளக்குறிச்சி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Kallakurichi, Transgender

    அடுத்த செய்தி