உளுந்தூர்பேட்டையில் வீட்டின் முன்பாக நின்ற இரு சக்கர வாகனத்தை திருடிய நண்பர்கள் டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்க முயன்றவர்கள் விட்டுச்சென்ற மிதிடிகளால் போலீசசாரிடம் வசமாக சிக்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கீரியம்மன் கோவில் அருகே இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடை தைப்பூசம் காரணமாக நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையை மர்ம நபர்கள் உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு செருப்புகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் உளுந்தூர்பேட்டை உளுந்தூர் காலனியைச் சேர்ந்த அய்யப்பன் என்ற கட்டிட தொழிலாளி தனது வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்றும் யாரோ திருடிச் சென்றதாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடையின் முன்பாக நின்று இருசக்கர வாகனத்தின் பதிவு எண் ஐயப்பன் என்பவர் கொடுத்த புகாரில் இருந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை ஒன்றாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடையின் முன்பாக கிடந்த செருப்புகளை போலீசார் ஐயப்பனிடம் காட்டிய பொழுது அந்த செருப்புகள் உளுந்தூர் காலனியைச் சேர்ந்த பவித்ரன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரின் செருப்புகள் என்று தெரிவித்தார். மேலும் இதற்கு ஆதாரமாக அவர்கள் தங்களது செல்போன்களில் வைத்திருந்த புகைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் அதில் இரண்டு செருப்புகளும் பவித்திரன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருடைய சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் பிடித்த போலீசார் தொடர்ந்து அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களது நண்பர் தீனா என்பவரோடு சேர்ந்து மூன்று பேரும் ஐயப்பன் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி டாஸ்மாக் மதுபான கடைகள் தைப்பூசத்தை யொட்டி மூடி இருக்கும் என்பதால் நேற்று செவ்வாய்க்கிழமை தாங்கள் குடிப்பதற்கு போக மீதி இருக்கக்கூடிய மதுபாட்டில்களை விற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் உள்ள 4 பெட்டிகளை மதுபோதையில் எடுத்து வரும்போது அதைத் தூக்க முடியாமல் அதே இடத்தில் போட்டு சென்றுள்ளனர்.
மேலும் டாஸ்மாக் மதுபான கடையில் இருந்த 5000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் அவர்கள் கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதைக்காக டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடிக்க சென்றவர்களை போலீசார் மிதியடிகளை கொண்டே குற்றவாளிகளை கைது செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : எஸ் . செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.