பிரதமர் நரேந்திர
மோடி நாடாளுமன்றத்தில் பேசும் ஒரு மணி நேரத்தில் 50 நிமிடங்களுக்கு நேரு,
காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்வதாக
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். தமிழக முதலமைச்சர், தமிழக எம்.பி.க்கள் ஆகியோரை பார்த்து பிரதமர் பயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொது செயலாளருமான ஆ.ராசா எம்.பி பல்வேறு இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பேசிய ஒரு மணி நேரத்தில் 50 நிமிடம் முன்னாள் பிரதமர் நேரு செய்தது தவறு, காங்கிரஸ் செய்தது தவறு அவர்கள் ஆட்சியால் தான் இந்தியா வீணாக போய் விட்டது என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசவேண்டிய அரசியல் விவகாரங்களை உள்ளே பேசி நாடாளுமன்றத்தின் மாண்பையும் புனிதத்தையும் மேன்மையையும் சிறுமைபடுத்தி உள்ளார் என குற்றம்சாட்டினார்.
மேலும் அண்டை நாடுகளை பார்த்தும் இந்தியாவில் உள்ள பிறமாநில முதல்வர் முதல்வர்களையும் மாநிலங்களையும் பார்த்தும் பயப்படாத மோடி தமிழக எம்பிக்களையும், தமிழக முதல்வரை பார்த்தும் பயப்படுகிறார் எனவும் கூறினார். தொடர்ந்து பேசுகையில் ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜானாவை காலி செய்த கயவாளி ,ஊழல் செய்தவர், ஊதாரித்தனமான செலவுகளை செய்தவர் எனவும் தமிழகத்தை 6 லட்சம் கோடி கடனில் விட்டு சென்றவர் எனவும் சரமாரியாக வசைபாடினார்.
இதையும் படிங்க: சிறையில் சொகுசு வசதி குற்றச்சாட்டு: சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக உத்தரவு
மேலும் ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களில் தமிழக முதல்வர்பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார் எனவும் மீதமுள்ள நான்கரை ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றும் எனவும் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் உதய சூரியன் மற்றும வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்
செய்தியாளர்: செந்தில்குமார்- கள்ளக்குறிச்சிஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.