உளுந்தூர்பேட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரியின் உடல் 2 நாள் கழித்து சடலமாக மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா. 24 வயதான இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கன்னியாஸ்திரி பயிற்சி முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முதலாமாண்டு சேர்ந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் புதன்கிழமை மதியம் வகுப்பு முடித்துவிட்டு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதிக்கு வந்த கௌசல்யா அருகில் உள்ள விவசாய நிலத்தில் மஞ்சள் அறுவடை பணிகளை பார்வையிட சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் சென்று அந்த சிறுவனுக்கு சாக்லேட் வழங்கி விட்டு சிறிது நேரம் விளையாடினார். பின்னர் விடுதிக்குச் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்தார்.
தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் நேற்றுமுன்தினம் மதியத்தில் இருந்து கௌசல்யாவின் உடலை தேடிவந்தனர். 90 அடி ஆழ கிணற்றில் முழுமையாக தண்ணீர் இருந்ததால் அவரது உடலை கண்டு பிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணிக்கு மேல் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக கௌசல்யாவின் உடலை தேடும் பணி நிறுத்தப்பட்டது தொடர்ந்து ராட்சத குழாய்கள் மூலம் 3 விவசாய நீர்மூழ்கி மோட்டார் களை பயன்படுத்தி விடிய விடிய கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது.
இந்த நிலையில் நேற்று காலை கௌசல்யாவின் உடல் கிணற்றில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்த கௌசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கன்னியாஸ்திரி கௌசல்யாவின் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.