உளுந்தூர்பேட்டை அருகே கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து சென்ற மனைவியை தன்னிடம் ஒப்படைக்க மறுத்தவர் அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துரை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சமுத்து. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த மாலதி என்ற பெண்ணை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை விட்டு மாலதி பிரிந்து சென்றார்.
வீட்டை விட்டு வெளியேறிய மாலதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடை அருகே பரிதவித்துக் கொண்டிருந்தார். மாலதிக்கு அந்த சாலையோர டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த வேலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமாகி பரிக்கல் அருகே உள்ள செம்மணந்தல் கிராமத்தில் வசித்து வந்த வேலு வேலை பார்க்கும் நேரத்தில் மாலதியை தனது கண்காணிப்பில் பாதுகாத்து வந்துள்ளதாக தெரிகிறது.
வேலு தனது வீட்டிற்கு செல்லும் நேரங்களில் சாலையோர கடைகளின் வாசலில் தங்கி காலத்தை கழித்து வந்துள்ளார். அப்போது தனிமையில் இருந்த மாலதிக்கு தேசிய நெடுஞ்சாலையில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் ஓட்டுனர்கள் உள்ளிட்ட சில ஆண் நண்பர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தவறான பாதையில் சென்ற மாலதி மது பழக்கத்திற்கு அடிமையாக அவர்களுடன் நெருக்கமாக உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் இதையறிந்த வேலு டீ மாஸ்டர் வேலையை விட்டு விட்டு மாலதியுடன் நெருக்கமாக பழகி வந்தவர்களோடு மது அருந்தி விட்டு அவர்களோடு இனக்கமாக பழகி வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் காணாமல் போன தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி அலைந்த பிச்சமுத்து தனது மனைவி மாலதி உளுந்தூர்பேட்டையை அடுத்த பரிக்கல் அருகே சுற்றி திரிவதை அறிந்து அங்கு சென்றுள்ளார். இரண்டு வருடங்களாக பிரிந்திருந்த தனது மனைவியை கண்ட பிச்சமுத்து தன்னுடன் அழைத்துச்சென்ற மகன்களை காண்பித்து தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதையறிந்த டீ மாஸ்டர் வேலு அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிச்சமுத்து டீக்கடை வாயிலில் இருந்த விறகு கட்டையை எடுத்து வேலுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமுற்ற வேலு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அளித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துதுமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேலுவை தாக்கிவிட்டு சம்பவ இடத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் மேட்டத்தார் சாலையோரம் நடந்து சென்ற பிச்சமுத்துவை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.