கள்ளக்குறிச்சி அருகே காதலி இதய நோயால் இறந்து விட்டார் என்று தெரிந்தவுடன் காதலனும் தற்கொலை செய்துகொண்ட சோகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் மணிகண்டன் (வயது 26). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்தார். இவருக்கு முகநூல் மூலமாக பூமிகா என்கிற பெண் அறிமுகமானார். இருவரும் முதலில் நண்பர்களாக பேசி வந்தனர். இந்தப் பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது.
Also Read: கணவனை இழந்த பெண்ணிடம் காதல் வார்த்தை பேசி கர்ப்பமாக்கிய காவலர்.. நீதி கேட்டு 2 வருடமாக போராடும் அவலம்
இதுவரையில் இருவரும் நேரில் சந்தித்தது கூட இல்லை என்றாலும் மணிகண்டன் பூமிகாவை ஆழமாக காதலித்து வந்துள்ளார். பூமிகாவை நேரில் சந்தித்து தனது காதலை எப்படியாவது வெளிப்படுத்திவிட வேண்டும் என காத்திருந்த மணிகண்டனால் கடந்த சில நாட்களாக பூமிகாவிம் பேச முடியவில்லை. இதனால் பூமிகாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர் பரிதவித்து போனார்.
தொடர்ந்து பூமிகாவின் செல்போனுக்கு அவர் தொடர்பு கொண்ட நிலையிலேயே இருந்துள்ளார். அதில், சில தினங்களுக்கு முன்பு பூமிகாவின் பாட்டி செல்போனை எடுத்து பேசினார்.
அப்போது அவரிடம் பூமிகா குறித்து மணிகண்டன் கேட்டுள்ளார் அப்போது அவர், இதய நோய் பாதிப்பு காரணமாக பூமிகா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டவுடன், பேரதிர்ச்சிக்கு உள்ளான மணிகண்டன் அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார். இதய நோயால் காதலி சென்ற இடத்துக்கே சென்று விடலாம் என்கிற முடிவுக்கு மணிகண்டன் வந்தார்.
Also Read: பெண்ணின் மாமனாரை கொலை செய்ய வாட்ஸ் அப்பில் சதித்திட்டம் - நடந்தது என்ன?
இறுதியாக, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த அவரிடம், குடும்பத்தினர் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து கேட்டனர். அப்போது அவர், தான் பூமிகா என்கிற பெண்ணை காதலித்ததாகவும், அவர் இறந்து விட்டதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது நிலை மோசமானதால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும், மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலி எந்த ஊரை சேர்ந்தவர் என்கிற முழு விவரமும், நேரில் கூட அவரது முகம் பார்த்திராத நிலையில், அந்த பெண்ணுக்காக தனது உயிரை மணிகண்டன் மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : எஸ் .செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.