சின்ன சேலம் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, கடந்த 13ம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் நேற்று கலவரமாக உருவெடுத்தது.
இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
நீதிபதி சரமாரி கேள்வி:
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி வழக்கு தொடர்ந்து விட்டு, சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? இந்த போராட்டத்தை நடத்த அனுமதித்தது யார்? சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொண்டால், நீதிமன்றங்கள் எதற்காக உள்ளது? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இந்த சம்பவத்தை சில யூடியூபர்கள் பெரிதாக்கி உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, சிலர் வாட்ஸ்ஆப் மூலம் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாக விளக்கமளித்தார். காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, இந்த சம்பவத்தில் போலீசார் நடுநிலையுடன், சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். போராட்டக்காரர்கள் அமைதியான முறையில்தான் முதலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். இருந்தாலும் காவல்துறையினர் அவர்களை தடுத்து பலரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே, மாணவியின் மரணம் குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு டி.ஜி.பி. மாற்றிவிட்டார் என்றார்.
கருப்புச் சட்டை அணிந்த குழுவினர் யார்?
அப்போது நீதிபதி, இந்த போராட்டத்தில் கருப்புச் சட்டை அணிந்த ஒரு குழுவினர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்த வன்முறை ஒன்றும் திடீரென வெடித்தது அல்ல என்றும் திட்டமிட்டு, ஒரு கும்பல் நடத்திய ஒருங்கிணைந்த குற்றச் செயல் எனவும் தெரிவித்த நீதிபதி, இந்த வன்முறையாளர்கள் மீது காவல்துறை தங்களது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Also Read: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : இறுதிச் சடங்கு அசம்பாவிதம் இன்றி அமைதியாக நடக்கவேண்டும் - தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவு
மீடியா டிரையல் - யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை
டிராக்டரை கொண்டு வந்து வன்முறையில் ஈடுபட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது எனவும் இந்த வன்முறை சம்பவத்துக்கு பொதுமக்களை ஒன்று திரட்டிய வாட்ஸ் ஆப் குரூப் அட்மின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, மீடியா டிரையல் நடத்திய யுடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
மறுபிரேத பரிசோதனை
இதையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, சம்பவம் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், தடய அறிவியல் துறை ஓய்வு பெற்ற இயக்குனர் சாந்தகுமாரி தலைமையில் விழுப்புரம் டாக்டர் கீதாஞ்சலி , திருச்சி டாக்டர் ஜெயந்தி, சேலம் டாக்டர் கோகுலநாதன் என 3 டாக்டர்களை கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
மறு பிரேத பரிசோதனை செய்யும் போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கேசவன் உடன் இருக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.
இந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் கட்சியினராக இருந்தாலும் சரி, வேறு ஏதாவது இயக்கமாக இருந்தாலும், காவல்துறையினர் நேர்மையுடன், கடுமையுடன் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
மாணவி இறப்பதற்கு முன்பு யாருடன் எல்லாம் போனில் பேசினார்?
எதிர்காலத்தில் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை சி.பி.சி.ஐ.டி. தான் விசாரிக்க வேண்டும் எனவும் மரணம் அடைந்த மாணவி இறப்பதற்கு முன்பு யாருடன் எல்லாம் போனில் பேசினார்? என்ன பேசினார்? என்பதை கண்டறிந்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
இந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் கட்சியினர் இருந்தாலும் சரி, வேறு ஏதாவது இயக்கமாக இருந்தாலும், காவல்துறையினர் நேர்மையுடன், கடுமையுடன் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மாணவி மரணம் குறித்து ஊடகங்களில் விவாதம் ஏதுவும் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஜூலை 29 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.