• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • பேஸ்புக் பதிவு... பாமக பிரமுகரை முச்சந்தியில் வைத்து தாக்கிய இன்ஸ்பெக்டர்..! வைரல் வீடியோவால் இடமாற்றம்

பேஸ்புக் பதிவு... பாமக பிரமுகரை முச்சந்தியில் வைத்து தாக்கிய இன்ஸ்பெக்டர்..! வைரல் வீடியோவால் இடமாற்றம்

வீடியோ காட்சிகள்

வீடியோ காட்சிகள்

"சக்திவேல் தாக்கப்படுவதை அறிந்து ஓடி வந்து அவரது தாய், தந்தையும் ஆய்வாளர் சுதாகரிடம் விட்டுவிடுமாறு கெஞ்சியும் பொருட்படுத்தாமல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டார்"

 • News18
 • Last Updated :
 • Share this:
  சின்னசேலத்தில் முகநூல் பதிவுக்காக முச்சந்தியில் வைத்து பாமக ஒன்றிய செயலாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்கவும், அவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்புவதும், சாலைகளில் மக்கள் நடமாடாமல் பார்த்துக்கொள்வதும் என இரவு பகலாக போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

  கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க விழிப்புணர்வு, பாதுகாப்பு பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னசேலம் காவல் ஆய்வாளர் வேறு பணிகளில் தீவிரம் காட்டியதால் சிக்கலுக்கு ஆளாகி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் பாமகவின் சின்னசேலம் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். சின்னசேலம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுதாகருக்கும் சக்திவேலுக்கும் இடையில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் முகநூல் மூலம் ஆய்வாளருக்கு சக்திவேல் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், பாமக தொண்டர்களை பொய் வழக்குகள் மூலமாக இனி தொட வேண்டும் என்று நினைத்தால், தொண்டர்களுக்காகவும், சமுதாய மக்களுக்காகவும் என் உயிரை விடவும் தயங்கமாட்டேன் என்பதை, சின்னசேலம் காவல் ஆய்வாளர் சுதாகர் அவர்களுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியிருந்தார்.

  இதை முகநூலில் பார்த்து ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் சுதாகர் வெள்ளிக்கிழமை இரவு சக்திவேலை தேடி சாதாரண உடையில் மூங்கில்பாடி கிராமத்திற்கு சென்றுள்ளார். கிராமத்தில் மின்சாரம் தடைபட்டு இருந்ததால் சக்திவேல் முச்சந்தியில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

  அவரை பார்த்த காவல் ஆய்வாளர் சுதாகர் முகநூல் பதிவு குறித்து கேட்டு சக்திவேலை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளார். சக்திவேல் தாக்கப்படுவதை அறிந்து ஓடி வந்து அவரது தாய், தந்தையும் ஆய்வாளர் சுதாகரிடம் விட்டுவிடுமாறு கெஞ்சியும் பொருட்படுத்தாமல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டார்.  தனது முகநூல் பதிவு தவறென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இது போன்று அத்துமீறி தாக்குதலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தார். ஆனால் அது எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சுதாகர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.

  தொடர்ந்து காவல் நிலையத்திலிருந்து ஜீப்பை வரவழைத்து, அதில் சக்திவேலை தூக்கிப் போட்டுக்கொண்டு காவல் நிலையம் சென்றார் ஆய்வாளர் சுதாகர். சக்திவேலுவை தாக்கும் காட்சியை, அருகில் இருந்த அவரது நண்பர்கள், தங்கள் மொபைல் போனில் படமெடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

  இது மாவட்டம் முழுவதும் தீயாய் பரவியது. தகவலறிந்து காவல்நிலையத்திற்கு சென்ற பாமகவினர் சக்திவேலின் முகநூல் பதிவில் எந்த அவதூறும் இல்லாத நிலையில் கைது செய்தது எப்படி என கேள்வி எழுப்பினர். இதை அடுத்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவர்களுடன் சக்திவேலை, காவல் ஆய்வாளர் சுதாகர் அனுப்பி வைத்தார்.

  ஆனால் தாக்குதல் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., ஜெயசந்திரன் கவனத்திற்கு சென்றது. ஊரடங்கு நேரத்தில் பிரச்னை பெரிதாகி தலைவலியை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட சின்னசேலம் காவல் ஆய்வாளர் சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankar
  First published: