கல்கி சாமியார் நிறுவன ஐடி ரெய்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்... அதிரவைக்கும் பின்னணி

கல்கி பகவான் சாமியார், அவரது மகன் தொடர்புடைய இடங்களில் கணக்கில் வராத 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

கல்கி சாமியார் நிறுவன ஐடி ரெய்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்...  அதிரவைக்கும் பின்னணி
  • Share this:
கல்கி சாமியார் மற்றும் அவரது மகன் தொடர்புடைய இடங்களில் நடந்துவரும் வருமானவரித்துறை சோதனையில் கணக்கில்வராத பல கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. சட்டவிரோத முதலீடு குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கல்கி பகவான்.. அம்மா பகவான்..ஸ்ரீ பகவான்.. என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த சாமியாரின் உண்மை பெயர் விஜயகுமார். தென்னிந்தியா முழுவதும் பிரபலமான சாமியாரான இவர் தனது மனைவி பத்மாவதியுடன் காட்சியளித்து, தியான, யோக வகுப்புகளை எடுத்து வருகிறார். வேலூர் குடியாத்தம் அருகில் உள்ள நத்தம் என்ற கிராமத்தில் பிறந்த கல்கி பகவான், எல்.ஐ.சி முகவராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

தற்போது ஆந்திரா, சித்தூர் அருகே பல கோடி மதிப்புள்ள மிகப்பிரம்மாண்டமான ஒன்னெஸ் டெம்பிள் என்ற ஆசிரமத்தை நடத்தி வருகிறார் கல்கி பகவான். ராஜஸ்தான் மார்பிள் கற்களால் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த ஆசிரமத்தில் எல்லா நவீன வசதிகளும் இருக்கின்றன. உள்நாட்டவர், வெளிநாட்டவர் என தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இவரது ஆசிரமத்திற்கு வந்து செல்கின்றனர். சாமியார் நடத்தும் தியான வகுப்புகளில் பங்கேற்க குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.


கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா, ஒன்னெஸ் டெம்பிளை நிர்வகித்து வருகிறார். இதுமட்டுமின்றி, 20-க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். சென்னையில் வசித்துவரும் கிருஷ்ணாவிற்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையிட்டு வருகிறார்கள். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் சாமியார் மற்றும் அவரது மகன் தொடர்புள்ள இடங்களில் 300க்கும் அதிகமான அதிகாரிகள் நடத்திவரும் சோதனையில் வெளியாகியுள்ள பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்கி பகவான் சாமியார், அவரது மகன் தொடர்புடைய இடங்களில் கணக்கில் வராத 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. ஒயிட் லோட்டஸ், கோல்டன் லோட்டஸ், புளூ வாட்டர், ட்ரீம் வியூ போன்ற பெயர்களில் செயல்பட்டுவரும் கட்டுமான நிறுவனங்களை கிருஷ்ணா நிர்வகித்துவருகிறார். இந்த நிறுவனங்களின் பெயரில், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

நிலத்தில் முதலீடு செய்தவர்கள் யார் யார்? முதலீடுகளின் மூலம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது. முதல்கட்ட விசாரணையில், கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஏக்கரில் அமைந்துள்ள கல்கி பகவான் சாமியாரின் ஆசிரமத்தில் 20 அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்கி பகவான் சாமியாரின் மகன் கிருஷ்ணாவின் தொழில் கூட்டாளிகள் 20 பேரை அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து, கிருஷ்ணாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துவருகின்றனர். ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தில் நுழைந்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு குறித்து துருவித்துருவி விசாரணை நடத்திவருகிறார்கள். விசாரணை முடிவில் சாமியார் குடும்பம் செய்த மோசடிகள் அம்பலமாகுமா என்பது கேள்விகுறியாக உள்ளது.Also Watch

First published: October 16, 2019, 10:49 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading