Home /News /tamil-nadu /

கலவர பூமியான கள்ளக்குறிச்சி.. நடந்தது என்ன? 10 முக்கிய தகவல்கள்..

கலவர பூமியான கள்ளக்குறிச்சி.. நடந்தது என்ன? 10 முக்கிய தகவல்கள்..

கலவர பூமியான கள்ளக்குறிச்சி..

கலவர பூமியான கள்ளக்குறிச்சி..

கள்ளக்குறிச்சி கலவரத்தில் வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த தீபக், சூர்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை நடந்தவை குறித்த தகவல்களை பார்க்கலாம்..
  கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமி, ஜூலை 13ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகம் தரப்பில், மாணவி தங்கியிருந்த விடுதியின் மூன்றவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் பெற்றோர் இதனை ஏற்க மறுத்து மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை போலீசார் ஏற்றுக்கொண்டாலும், உடனடி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு 13ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பெற்றோர் தரப்பில் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு, மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  இந்த போராட்டத்தின் 4வது நாளாக இன்று மாணவிக்கு நீதி கேட்டு, பெருமளவில் கூட்டம் சேர்ந்தது. காவல்துறையினர் தடுப்புகளை மீறி மாணவி படித்த பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் கும்பலாக நுழைந்தனர். அங்கு பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்தனர். மேலும், பள்ளியில் உள்ள நாற்காலி, மேஜைகள், கண்ணாடி ஜன்னல்கள், பள்ளியின் பெயர் பலகைகள் என அனைத்தையும் உடைத்தனர்.
  போராட்டக்காரர்களில் சிலர் டிராக்டரை கொண்டு பேருந்துகள் மீது மோதி சேதமடைய செய்தனர். அதேநேரத்தில் பள்ளிக்கு வெளியே நின்றிருந்து காவல்துறை வாகனத்தையும் அடித்து நொருக்கி தீ வைத்து எரித்தனர். தீயை அனைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் அடித்து விரட்டி அனுப்பினர்.
  நிலைமை எல்லை மீறி செல்லவே, சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது 20க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்தனர். இதனிடையே, மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வேண்டுகோள் விடுத்தார். மேலும், வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
  இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்க மூலம், மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்” என தெரிவித்தார்.
  கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், காவல் கண்பாணிப்பாளர் ஆகியோர் பள்ளி முழுவதும் ஆய்வு நடத்தினர். கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக உளவுத்துறை போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் 500 பேர் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
  கலவரத்திற்கு உள்ளான பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என்றும், போராட்டம் காரணமாக 4,000 மாணவர்களின் கல்வி பாதிப்படைந்துள்ளதாகவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்தது.
  கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால், விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்தது.மேலும் , எந்தவித முன் அனுமதி பெறாமல் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தார் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடைவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தது.
  கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் செய்தவர்கள் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். இதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கலவரத்தில் வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த தீபக், சூர்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Kallakurichi

  அடுத்த செய்தி