• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா சிகிக்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொரோனா சிகிக்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதியில்  கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட தையல் கலைஞர்கள் மற்றும் சாக்கு தைக்கும் தொழிலாளர்கள் என 600 பேருக்கு உணவு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு உணவுப் பொருள்களை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, ‘மருத்துவமனைகள் அதிக கட்டணம் வாங்க கூடாது என்பது தான் அரசின் கருத்து. தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அதற்கு மேல் கட்டணம் வசூலிக்ககூடாது. இதை மீறி வசூல் செய்தால் அதன் நிர்வாக அனுமதியை முடக்குவோம் என்று அரசு தெரிவித்துள்ளது, எந்தளவு அழுத்தம் கொடுத்து சொல்ல வேண்டுமோ அந்த அளவிற்கு அரசு சொல்லியுள்ளது. மருத்துவக்குழுவும் ஆராய்ந்து வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்ககூடாது என்று எதிர்கட்சிகள் கூறலாம்.

பொதுமக்கள் நலன் கருதி கருத்து கூறுவது தவறில்லை. அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முதல்வர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதற்கான செலவினை ஏற்று கொள்கிறது. இதையும் சேர்த்து கனிமொழி கூறியிருந்தால் அது பாராட்டுக்குரிய விஷயம். கொரோனா காலத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று சொல்லக்கூடி நிலையை உருவாக்குகிறார்கள். எட்டு வழிச்சாலை பிரச்சினை இன்றைக்கு ஏற்படவில்லை. அங்குள்ள 5 மாவட்ட விவசாயிகளை அழைத்து பேசி ஓரளவுக்கு தீர்வு வந்த நேரத்தில் போராட்டம் காரணமாக நின்றது. எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசு திட்டம், மாநில அரசு அமுல்படுத்தக்கூடிய திட்டம் கிடையாது. வடமாநிலங்களில் சாலை வசதிகள் நம்மை விட பல மடங்கு மேலோங்கியுள்ளது. அப்படிபட்ட நேரத்தில் மத்திய அரசு முதன் முறையாக ரூ.10 ஆயிரம் கோடியில் இந்த சாலைவசதி திட்டத்தினை கொண்டு வந்தனர். அந்த நிலையில் மத்திய அரசு தான் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.

மாநில அரசு செல்லவில்லை. பொதுவாக சாலைவசதி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினேனே தவிர எட்டு வழிச்சாலையை பற்றி கிடையாது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இதற்கு மேல் கருத்து சொல்வது நன்றாக இருக்காது. விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. குடிமரமாத்து பணிகள் மூலமாக அனைத்து நீர் நிலைகளும் தூர் வரப்பட்டுள்ளன. கருமேனி ஆறு, தாமிரபரணி, நம்பியாறு இணைப்பு திட்ட பணிகள் 3-வது கட்டத்தினை எட்டியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் 4-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஓராண்டில் பணிகள் நிறைவு பெற்று நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மக்கள் பயன்பெறுவார்கள். இந்தியாவில் நதி நீர் இணைப்பு என்று பேச்சு வாக்கில் இருந்தாலும் முதன் முதலில் அதனை அமுல்படுத்துகின்ற மாநிலம் தமிழகம் தான். தமிழக முதல்வர் விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர் என்பதால் காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளார்.

மின்சார திருத்த சட்டத்தினை திரும்ப பெற உடனடியாக மத்திய அரசுக்கு முதல்வர் எப்படி கடிதம் எழுதினரோ, அதை போன்று அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு நீங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள்  பாதிக்கப்பட்டால் அதற்கு தகுந்த முடிவினை முதல்வர் எடுப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: