ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

என்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

என்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

தேர்தல் தோல்விக்கு பயந்து என்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள் என அமமுக மீது அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ மும்முரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேதொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் போட்டியிடும் நிலையில் அமமுகவினர் தோல்வி பயத்தால் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் செ ராஜு நமது நியுஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நேற்றிரவு அதிமுக, அமமுக இருதரப்பிலும் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது காவல் துறை கேட்டுக் கொண்டதால் நான் என்னுடைய பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, என்னுடன் வந்த வாகனங்களையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நான் தனியாக காரில் சென்றேன்.

ஆனால் அமமுகவினர் எனது காரை வழிமறித்தனர். அதையெல்லாம் கடந்து நான் வந்தேன். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த வெடியை அமமுகவினர் என் கார் மீது வீசி எறிந்தனர். வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழ்நிலை இருந்தது. என்னுடைய கார் டிரைவர்,எனக்கு தீப்பொறி மேலே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த நேரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பொறுமையை கடைப்பிடித்து வந்தோம். அமமுகவின் அராஜக செயல் மக்களுக்கு தெரியும். மக்கள் முடிவெடுப்பார்கள். என்னுடைய கார் டிரைவர் லாவகமாக காரை ஓட்டவில்லை என்றால் கார் தீப்பிடித்து எரிந்து என்னுடைய உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

இதைக்கண்டு நான் அஞ்சப்போவதில்லை. தேர்தல் பணிக்கு வரும் போதே இப்படி அராஜகம் செய்யும்போது, நாளை தொகுதிக்கு பணிக்கு வரும் போது எப்படி நிலை இருக்கும் என்பதை மக்கள் கண்கூடாக பார்க்கிறார்கள். என்னுடைய தேர்தல் பணியை தடுப்பதற்காக கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். ஏனெனில் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளராக நான் இருக்கிறேன். 100% தொகுதி முழுவதும் சிறப்பான பணியாற்றியதால் எளிதில் வெற்றி பெறுவேன். என்னுடைய வெற்றியை தொகுதி மக்கள் தங்களுடைய வெற்றியாக கருதுகிறார்கள். தோல்வியின் பயத்தினால் இப்படிப்பட்ட செயல்களில் அமமுகவினர் இறங்கியுள்ளனர். எதையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன்.

பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். அதன்படி பணிவோடு மக்கள் பணியாற்றுகிறேன், களத்தில் துணிவோடு பணியாற்ற வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார்” இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

Published by:Sheik Hanifah
First published:

Tags: AMMK, Kadambur raju, Kovilpatti Constituency, TN Assembly Election 2021