கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்த விவகாரம்: கடம்பூர் ராஜூ விளக்கம்

அமைச்சர் கடம்பூர் ராஜூ

 • News18
 • Last Updated :
 • Share this:
  கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்தது தொடர்பான அதிமுகவின் விமர்சனத்திற்கு துரைமுருகன் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், கடம்பூர் ராஜூ  தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.  

  ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடிப்போம் என்று கூறியதால் தான் அவ்வாறு பேசியதாக கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக-வின் பொதுக்கூட்டத்தில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய, மெரீனாவில் இடம் வழங்கியது தாங்கள் அளித்த பிச்சை என்று கூறினார்.

  இதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதிட்டதாக தெரிவித்தார். உயர்நீதிமன்றத்தின் மூலமே, இடத்தை தாங்கள் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

  மேலும், அடக்கம் செய்வதற்கான இடத்தைப் பெற்ற தாங்கள், ராஜாஜி அரங்கை வழங்க மறுத்திருந்தால், நீதிமன்றம் மூலம் பெற்றிருப்போம் என்றும் அவர் கூறினார். கருணாநிதிக்கு அரசு மரியாதை வழங்கியது மத்திய அரசின் ராணுவம் தான் என்றும், இதுகூட தெரியாமல் அமைச்சர் பேசுவதாகவும் துரைமுருகன் விமர்சித்தார். ஒட்டுமொத்தமாக கருணாநிதி மறைவின்போது அதிமுக அரசு தொல்லை கொடுத்ததே தவிர, உதவி செய்யவில்லை எனவும் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

  இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடிப்போம் என்று திமுக-வினர் பேசியதால் தான், அதிமுக வழங்கிய பிச்சை என்று குறிப்பிட்டதாக கூறினார். கீழ்த்தரமான அமைச்சர் யார் என்று மக்களுக்கு தெரியும் என்றும், அரசியல் நாகரீகத்தை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

  அண்ணாவின் வழியில் அதிமுக தலைவர்களும், தொண்டர்களும் செயல்பட்டு வருவதாகவும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
  Published by:Saravana Siddharth
  First published: