• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • NEET Exam : ‘நீட்’ தொடர்பான நீதிமன்றத்தின் கருத்து தமிழ்நாட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி - கி.வீரமணி

NEET Exam : ‘நீட்’ தொடர்பான நீதிமன்றத்தின் கருத்து தமிழ்நாட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி - கி.வீரமணி

நீட் - வீரமணி

நீட் - வீரமணி

இது தொடக்கம்தான். நாம் தாண்டவேண்டிய தடைகளும், கடக்கவேண்டிய தூரமும் அதிகம்.

 • Share this:
  “ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் குழு ‘நீட்' தேர்வு தாக்கம் பற்றிய அறிக்கையைத் தருவதற்கு எந்தத் தடையும் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியிருப்பது தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த முதல் வெற்றி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திமுக அரசு - ‘நீட்' தேர்வினால் ஏற்படும் தாக்கம் எப்படிப்பட்டது, எவ்வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை சட்டப்பூர்வமாக புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்ட ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் குழுவின் நியமனம் செல்லாது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது. எனவே, அதை ரத்து செய்து ஆணையிடவேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை இன்று (13.7.2021) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு பாஜகவின் வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் குழு, ‘நீட்' தேர்வு தாக்கம் பற்றிய அறிக்கையைத் தருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளதானது தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும். இதனைப்பாராட்டி வரவேற்கிறோம்!

  தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கும் உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது!

  இந்த வழக்கு அழிவழக்கு என்பதை நாடே புரிந்துகொள்ளும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் பாஜக மனுதாரரைப் பார்த்து, “இப்படி கோர நீங்கள் யார்?'' என்ற கேள்வியையும், இது கொள்கை முடிவு; இதில் தலையிட முடியாது. இப்படி ஒரு குழுவை நியமித்து ஆலோசிக்கும் உரிமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு. அதைத் தடை செய்ய முடியாது என்று தெளிவுபடுத்தி, கேள்வி கேட்டிருப்பதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் குமுறலை எடுத்துக்காட்டி, ‘நீட்' தேர்விலிருந்து விதிவிலக்குக் கோரி, தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கும் உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

  அந்தக் குழுவின் அறிக்கை என்ன என்று கூடத் தெரிந்துகொள்ளும் முன்பே, அப்படி ஒரு குழு போடும் மாநில அரசின் உரிமையைக் கேள்வி கேட்டது. கேட்பது, எப்படிப்பட்ட அரசமைப்புச் சட்ட உரிமைப் பறிப்பு என்பதையும், அதனை உயர்நீதிமன்றம் ஏற்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியதும் முக்கியமானதாகும்.

  இதில் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் உடனடியாகப் பொங்கி எழுந்து சுமார் 27 பேர் இவ்வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள (Implead) முன்வந்தனர். பாஜக தனித்து நின்றது. பாஜகவின் இந்த முயற்சி எப்படிப்பட்ட பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பதற்கு அதே ராகத்தை வாசித்த ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரத்தின் கருத்தும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக அமைந்துள்ளது என்பதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

  ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை தமிழ்நாடு அரசு ஆவலோடு எதிர்நோக்கும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எப்படிப்பட்ட ஆக்க ரீதியானதாக இருக்கும் என்பதை தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிவிப்பார் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இது தொடக்கம்தான். நாம் தாண்டவேண்டிய தடைகளும், கடக்கவேண்டிய தூரமும் அதிகம்.

  Must Read : சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  நமது உளமார்ந்த பாராட்டு கலந்த நன்றி!

  அடுத்த வியூகம் பல்முனை வியூகமாக அமைவதே பிரச்சினைக்குத் தீர்வு காண உதவக்கூடும் என்பது நமது பழைய அனுபவமாகும். முன்வந்த அத்தனைக் கட்சி, அமைப்புகளுக்கும் நமது உளமார்ந்த பாராட்டு கலந்த நன்றி!” இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: