Home /News /tamil-nadu /

விடுதலை கோரிய நளினி, ரவிச்சந்திரன் வழக்கில் நாளை தீர்ப்பு

விடுதலை கோரிய நளினி, ரவிச்சந்திரன் வழக்கில் நாளை தீர்ப்பு

நளினி

நளினி

ஆளுனரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி  நளினி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை வழங்குகிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுனர் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி  நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும்,  இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தெரிவித்தார்.

அரசியல் சாசனத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் உயர் நீதிமன்றம் அதை சட்டவிரோதம் என அறிவிக்கலாம் எனவும், இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் தெரிவிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் இந்த விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க கூடாது எனவும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் போல், விடுதலை செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அதற்கு உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், விடுதலை செய்யக் கோரவில்லை எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிட தான் கோருவதாகவும், அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

குடியரசு தலைவர் இன்னும் ஆவணங்களை ஆளுநருக்கு அனுப்பவில்லை எனவும், அனுப்பினாலும் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்பதால் நளினியை விடுதலை செய்யும்படி மாநில அரசுக்கு  உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,  நளினிக்கு  விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ல் அமைச்சரவை ஆளுனருக்கு பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாக கூறிய அவர், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும்  விளக்கம் அளித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Chennai High court, Madras High court

அடுத்த செய்தி