திராவிட இயக்கத்தின் பிச்சையில் தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா? ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கில் நீதிபதி காட்டமான கேள்வி

ஆர்.எஸ்.பாரதி

நீதிபதி சதீஷ்குமார், திராவிட இயக்கம் இல்லாவிடில் நீதிபதிகள் சுயமாக முன்னேறி இருக்க முடியாதா என்றும் திராவிட இயக்கத்தின் பிச்சையில் தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா என கேள்வி எழுப்பினார்.

  • Share this:
    வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி தி. மு.க அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

    கடந்த ஆண்டு அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இது தொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு
    எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தன் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ் பாரதி தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆர்.எஸ் பாரதி தரப்பில்,திராவிட இயக்கத்தின் சிறப்புகளை பட்டயலிடவே அவ்வாறு பேசியதாகவும், நீதிபதிகள் நியமனத்தை பற்றி மட்டுமல்லாது மற்ற துறைகளை பற்றியும் பேசியிருந்ததாகவும் தெரிவித்தார்.

    ஆனால் நீதிபதிகள் நியமனம் குறித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், நீதிபதிகளை அவமதிக்கும் நோக்கத்தோடு பேசப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

    அதற்கு நீதிபதி சதீஷ்குமார், திராவிட இயக்கம் இல்லாவிடில் நீதிபதிகள் சுயமாக முன்னேறி இருக்க முடியாதா என்றும் திராவிட இயக்கத்தின் பிச்சையில் தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா என கேள்வி எழுப்பினார். சமீப காலங்களாக அரசியலில் அறிவுப்பூர்வமான கருத்து பரிமாற்றம் குறைந்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

    காவல்துறை தரப்பில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஒட்டுமொத்தமாக பட்டியலின சமுதாய மக்களிடையே வெறுப்புணர்வையும், பகையுணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு தொடர்பான வீடியோ ஆதாரங்கள் மற்றும் அவருக்கு எதிராக சாட்சிகள் உள்ளதால் அவர் வழக்கை எதிர்கொண்டு தான் ஆக வேண்டுமென வாதிட்டார்.

    இந்த வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.
    Published by:Vijay R
    First published: