உடனடி வேலை . வீட்டில் இருந்தே கைநிறைய சம்பளம்.. எந்த ஆவணமும் தேவையில்லை லோன் தயார் .. இது போன்று பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு தமிழகம் முழுவதும் மோசடியை அரங்கேற்றிவந்த பகீர் ஆசாமி சிக்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான பூவரசன். கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் பூவரசன் கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார் ஒன்றை கடந்த வாரம் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2021 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் வேலை வாய்ப்பு முகாம் ஒன்று நடந்தப்பட்டதாகவும், அதில் பங்கேற்ற சேலத்தை சேர்ந்த கேப்பிடல் பின்சர்வ் என்ற நிறுவனம் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
தனி நபர்களுக்கு லோன் எடுத்துக்கொடுப்பது தான் இந்த நிறுவனத்தில் பிரதான வேலை என்று அறிமுகம் செய்தவர்கள், மாதம் ரூ.30,000 வரை சம்பவளம் என்று கூறி, தன்னை நிறுவன தொடர்பாளராக பணிக்கு எடுத்ததாக கூறியுள்ளார். பணியில் சேர முதலில் 5,100 ரூபாய் கட்டணமாக நிறுவனம் பெற்றுக்கொண்டதாக பூவரசன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்தே நிறுவனம் கொடுக்கும் எண்களுக்கு போன் செய்து லோன் வேண்டுமா என்று கேட்பது தான் பூவரசனின் வேலை . நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் வேலை செய்ய வைத்த நிறுவனம் திடீரென உங்கள் நடவடிக்கை சரியில்லை என்று பூவரசனை பணியில் இருந்து நிறுத்தியுள்ளது. அதிர்ச்சியடைந்த பூவரசன் முன்பணமாக கட்டிய தொகையாவது திரும்பிக்கொடுக்க கேட்டுக்கொண்டுள்ளார் .ஆனால் எந்த பதிலும் நிறுவனதின் சார்பில் கொடுக்கப்பட வில்லை.
Read More : பாலியல் வன்கொடுமை செய்து 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை: 2 மருத்துவமனைகளுக்கு சம்மன்
பணிக்கு தேர்ந்தெடுத்ததில் இருந்து அனைத்து நடவடிக்கைகளும் சூம் மீட்டிங் நடைமுறையில் நடந்ததால் நேரில் யாரிடம் போய் கேட்பது என்று பூவரசுக்கு தெரியாமல் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று உணர்ந்த பூவரசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் நடந்த சம்பவங்கள் தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பூவரசனின் புகாரை பெற்ற சைபர் க்ரைம் போலீசார் சேலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிய கேப்பிடல் பின்சர்வ் நிறுவனத்தை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். நிறுவனத்தின் வங்கி கணக்குகளையும் கண்காணித்த போலீசார் நிறுவனம் மோசடியில் ஈடுப்படுவதை உறுதி செய்தனர்.
இதையடுத்து சேலம் சென்ற கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் கேப்பிடல் பின்சர்வ் நிறுவனத்தின் நிறுவனரான கோயமுத்தூர் மாவட்டம் ஒண்டியபுதூர். பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரை பிடித்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞர்களை வேலைக்கு எடுத்து அவர்களிடம் இருந்து முன்பணமாக ரூ 4000 முதல் 5000 வரை பெற்றுள்ளது தெரியவந்தது.
அத்துடன் பணிக்கு எடுத்த இளைஞர்களை எதோ காரணம் சொல்லி நான்கு மாதங்களில் கலட்டிவிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதும் விசாரணையில் உறுதியானது. அத்துடன் லோன் பெற்று தருகிறோம், வேலை வாங்கி தருகிறோம் என்று விதவிதமான கவர்ச்சி விளம்பரங்களை கொடுத்து கோடி கணக்கில் மோசடியில் ஈடுப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பத்து ஆண்டுகளில் இந்த கும்பல் தமிழகம் முழுவதும் ரூ.5 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள போலீசார் மோசடி ஆசாமி கிருஷ்ணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் ஏமாற்றம் அடைந்தவர்கள் அந்த அந்த மாவட்ட காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.